சனி, செப்டம்பர் 22, 2012

இன்று(சனிக்கிழமை) தூத்துக்குடி துறைமுகம் முற்றுகை !

Protesters to lay siege to Tuticorin port todayநெல்லை:கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் இன்று(சனிக்கிழமை) தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரையில்  ஓராண்டுக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை கடல் வழியாக செப்டம்பர் 22-ம் தேதி முற்றுகையிடுவோம்
என அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் அறிவித்தார். இந்தப் போராட்டத்துக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். இருப்பினும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மட்டுமின்றி திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமேசுவரம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விசைப்படகு மீனவர்கள் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்தும், நாட்டுப்படகு மீனவர்கள் திரேஸ்புரத்தில் இருந்தும், மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களில் கட்டுமரங்களில் சென்றும் சனிக்கிழமை காலை 8 மணியளவில் துறைமுகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்குள் செல்லாத மக்கள் தூத்துக்குடி ரோச் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடற்கரையில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 330 விசைப்படகுகளும், 3,300 நாட்டுப்படகுகளும் உள்ளன. விசைப்படகு, நாட்டுப்படகு, கட்டுமரங்கள் ஆகியவற்றில் கடல் வழியாகச் சென்று துறைமுகத்தை முற்றுகையிட்டால் தடுப்பதில் சிக்கல்கள் உள்ளன. காவல் துறை சார்பில் கடல் பாதையில் போதிய நடவடிக்கை எடுக்க முடியாத சூழலும் நிலவி வருகிறது.
இருப்பினும்  தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தைச் சுற்றி குறிப்பிட்ட தொலைவிலான பகுதிகள் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. தடையை மீறி துறைமுக எல்லைக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றால், மேலும் பதற்றமான சூழல் உருவாகும் என போலீசார் தெரிவித்தனர். போராட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் கடலோரப் பாதுகாப்புப்  பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி கடலோரப் பாதுகாப்பு பிரிவுக்குச் சொந்தமான 3 படகுகள் மட்டுமன்றி ராமநாதபுரம், சோழியங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட படகுகள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முற்றுகைப் போராட்டத்தையொட்டி தூத்துக்குடி கடலோரப் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக