புதுடெல்லி:இந்தியாவில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை துவக்கிய ஹஸாரே குழு மிகுந்த எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஜந்தர் மந்தர் எகிப்தின் தஹ்ரீர் சதுக்கம் போல் மாறிவிடுமோ என்ற எதிர்பார்ப்பு பலரிடம் ஏற்பட்டது. ஆனால், சங்க்பரிவார்களின் தொடர்பு, கார்ப்பரேட்டுகளை எதிர்க்காமை, அரச பயங்கரவாதத்தை கண்டுகொள்ளாமை போன்ற சறுக்கல்களால் இக்குழு மக்களின் நம்பிக்கையை இழந்தது. தொடர்ந்து நடந்த போராட்டங்களில் மக்கள் ஆதரவு
வெகுவாகவே குறைந்துவிட்டது. மக்கள் ஆதரவு குறைவு ஒரு பக்கம், அரசு இவர்களது போராட்டத்தை கண்டுகொள்ளாதது மறுபக்கம் என வெறுத்துப்போன ஹஸாரே, இனி உண்ணாவிரதப் போராட்டமே வேண்டாம் என முடிவெடுத்தார். அரசியல் கட்சி துவங்கப் போவதாக அறிவித்த ஹஸாரே அடிக்கடி பல்டியடித்தார்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் ‘இந்தியா எகைன்ஸ்ட் கரப்ஸன்’ என்ற பெயரில் போராட்டங்களை நடத்தி வந்தார். ஹஸாரே குழுவினரில் 76 சதவீதம் பேர் அரசியல் கட்சி துவங்குவதை ஆதரிப்பதாக கெஜ்ரிவால் கூறினார். இது சமூக வலைதளங்களின் மூலம் நடத்தப்பட்ட சர்வேயில் தெரியவந்ததாக தெரிவித்தார்.
ஆனால், இந்த சர்வே முடிவை ஹஸாரே நிராகரித்து விட்டார். அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனியாக அரசியல் அமைப்பை தொடங்க ஆர்வமாக இருந்தனர்.
இந்நிலையில் அன்னா ஹஸாரே இன்று மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 9 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையின் முடிவில் தனது குழு இரண்டாகப் பிரிந்ததாக ஹஸாரே அறிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “எங்கள் அமைப்பு இனி இரண்டாக பிரிந்து செயல்படும். நான் எந்த அரசியல் அமைப்பிலும் சேர மாட்டேன். அவர்களுக்காக பிரச்சாரமும் செய்ய மாட்டேன். எனவே அரசியல் கட்சி தொடங்கும் அவர்கள், எனது பெயரையோ, புகைப்படத்தையோ அவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று கூறியிருக்கிறேன். அவர்களின் சொந்த பலத்துடன் போராட வேண்டும்.” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக