வியாழன், செப்டம்பர் 27, 2012

பாலஸ்தீன் அகதி முகாம்களில் தீ விபத்து மூன்று வயது சிறுவன் பலி . . .

காஸா: கடந்த புதன்கிழமை (26/09/2012) காஸாவில் உள்ள பலஸ்தீன் அகதி முகாம் ஒன்று தீப்பிடித்துக்கொண்டதில் மூன்று வயதுப் பாலகன் பலியாகியுள்ளான். ஃபாதி அல்பக்தாதி என்ற மேற்படி பலஸ்தீன் சிறுவனின் தந்தையும் (வயது 26), 1 1/2 வயதான சகோதரியும் மோசமான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் தொடர் முற்றுகை காரணமாக எரிபொருள், மின்சாரம், மருந்துப் பொருட்கள், கட்டிடப்பொருட்கள் முதலான அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவுசெய்ய முடியாமல், காஸாவில் வாழும் பலஸ்தீன் பொதுமக்கள்
மிகுந்த இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
ஆக்கிரமிப்பு இஸ்ரேல், காஸா மீது வருடக்கணக்கில் மேற்கொண்டுள்ள முற்றுகை சட்டவிரோதமானது என்றும், அப்பாவிப் பலஸ்தீன் பொதுமக்களுக்கு எதிரான அம்முற்றுகை உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்றன. எனினும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் தன்னுடைய முற்றுகையைத் தளர்த்தவோ, சட்டவிரோத யூதக் குடியேற்ற விஸ்தரிப்பை இடைநிறுத்தவோ இல்லை.
இந்நிலையில், கடந்த சில வருட காலமாக எரிபொருள் பற்றாக்குறை காரணமாக காஸாவின் மின் உற்பத்தி பெரிதும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால், பொதுமக்களின் அன்றாட சுமுக வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காஸாவில் உள்ள மருத்துவமனைகள் இம் மின் பற்றாக்குறையால் மிக மோசமான நெருக்கடி நிலைக்கு முகம்கொடுத்து வருகின்றன.
காஸாவில் நிலவும் தொடர் மின்வெட்டு காரணமாக பக்தாதி குடும்பத்தினர் ஏனைய பலஸ்தீன் குடும்பங்களைப் போலவே, தம்முடைய அகதி முகாமில் இரவு நேரங்களில் மெழுகுவர்த்தியையே பயன்படுத்தி வந்துள்ளனர். நேற்றிரவு எதிர்பாராதவிதமாக மெழுகுதிரி சரிந்து விழுந்ததில் முகாம் தீப்பற்றிக்கொண்டுள்ளது.
இந்த விபத்து குறித்துக் காஸாவில் உள்ள பலஸ்தீன் அரசாங்கம் சார்பில் கருத்துரைத்த தாஹிர் அல் நூனு, "தீ விபத்தில் பரிதாபமாய் இறந்த பாலகன் ஃபாதிக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது தந்தையும் சின்னஞ்சிறு சகோதரியும் விரைவில் நலம்பெற வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றோம். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் தொடர் முற்றுகை, இடையிடையே இடம்பெறும் ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் என்பவற்றால் நமது மக்கள் எத்தனையோ விதமான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்"  என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், "ஈவிரக்கமற்ற இஸ்ரேலிய முற்றுகையால், அப்பாவிப் பலஸ்தீன் பொதுமக்களின் நாளாந்த சுமுகவாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில்,  சர்வதேச சமூகம் இனியும் வாய்மூடி மௌனியாய் இருப்பதைக் கைவிட்டு, ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரவேண்டும். அவ்வாறே, காஸா மக்களின் மின் தேவையை நிவர்த்திப்பது தொடர்பில் எகிப்திய அதிகாரத் தரப்பு நமக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் காலதாமதத்தைத் தவிர்த்து, அதனை விரைவுபடுத்த முன்வரவேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், பக்தாதி குடும்பத்தினருக்கு நேர்ந்தது போன்ற அவலமான விபத்துக்களைத் தவிர்க்க முடியாமல் போகும்" என்று தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக