புதுடெல்லி:குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடையவர் என்று இந்தியா குற்றம் சாட்டும் பீகாரைச் சார்ந்த இளம் முஸ்லிம் பொறியாளர் ஃபஸீஹ் மஹ்மூதைக் குறித்து கூடுதல் ஆதாரங்களை அளிக்கவேண்டும் என்று இந்திய அரசுக்கு சவூதி அரேபியா கோரிக்கை விடுத்துள்ளது. பெங்களூர், டெல்லி ஆகிய பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஃபஸீஹ் சதித்திட்டம் தீட்டியது, இந்தியன் முஜாஹிதீன் அமைப்புடனான தொடர்பு ஆகிய
குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்தியா ஆதாரங்களை அளிக்கவேண்டும் என்று சவூதி அரேபியா அரசு கோரியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃபஸீஹை ஒப்படைக்க இந்தியா, சவூதியிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இவரை கண்டுபிடிக்க இண்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிட்டிருந்தது.
2010-ஆம் ஆண்டு பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு, டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதுக்கு அருகே நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு ஆகியவற்றில் ஃபஸீஹ் மஹ்மூதிற்கு பங்கிருப்பதாக இந்திய அரசு குற்றம் சாட்டுகிறது. கடந்த ஒன்பது மாதங்களாக கைது செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியதில் ஃபஸீஹின் பங்கினைக் குறித்து தகவல் கிடைத்ததாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர். ஃபஸீஹிற்கு எதிரான வழக்கு விபரங்களையும், கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களையும் சமர்ப்பிக்குமாறு சவூதி அதிகாரிகள் இந்திய அதிகாரிகளை கேட்டுள்ளனர்.
ஃபஸீஹை ஒப்படைக்கக் கோரும் இந்திய அரசின் கோரிக்கையை பரிசீலிக்கும் முன்னர் குண்டுவெடிப்பு வழக்குகளில் ஃபஸீஹின் பங்கினைக் குறித்து தாங்கள் விசாரிக்கவேண்டும் என்பது சவூதியின் நிலைப்பாடாகும். குண்டுவெடிப்புகளில் ஃபஸீஹின் பங்கினைக் குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்திகளை சவூதி அரேபியா பொருட்படுத்தவில்லை.
இந்தியா-சவூதி பாதுகாப்பு அதிகாரிகளால் கடந்த மே மாதம் 13-ஆம் தேதி தனது கணவர் கைது செய்யப்பட்டார் என்றும், இந்திய அதிகாரிகளின் கஸ்டடியில் அவர் தற்போது உள்ளார் எனவும் குற்றம் சாட்டி ஃபஸீஹின் மனைவி நிகாத் பர்வீன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்திய அரசு நிகாத் பர்வீனின் குற்றச்சாட்டை மறுத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக