வியாழன், செப்டம்பர் 20, 2012

கூடியது காவிரி நீர் ஆணையக் கூட்டம்-பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் ஜெ. பங்கேற்பு !

 Manmohan Chair Meeting Cra Today Jaya To Attend டெல்லி: 7வது காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் அவரது இல்லத்தில் கூடியது. இதில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றார். இதேபோல கர்நாடகம் மற்றும் புதுவை முதல்வர்களும் கலந்து கொண்டனர். கேரளா சார்பில் அமைச்சர் பி.ஜே.ஜோசப் பங்கேற்றார். தமிழத்தில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லை
மற்றும் கர்நாடகம் தண்ணீர் தராததால் அணையை திறக்க முடியவில்லை. மாறாக செப்டம்பர் மாதத்தில்தான் அணை திறக்கப்பட்டது. இப்போதும் கூட கர்நாடகத்திலிருந்து போதிய அளவில் தண்ணீர் வராததால் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கர்நாடகம், ஜூன் மாதம் தொடங்கி இதுவரை 120 டிஎம்சி தண்ணீர் தந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை வெறும் 20 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது.
இதையடுத்து காவரி நதி நீர் ஆணையத்தைக் கூட்டுமாறு பிரதமருக்கு முதல்வர் பலமுறை கோரிக்கை வைத்தார். ஆனால் மத்திய அரசு பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்து வந்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுகியது. காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட உத்தரவிடும்படியும், கர்நாடகம், காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி தண்ணீரைத் திறந்து விட உத்தரவிடக் கோரியும் தமிழக அரசு தனது மனுவில் கூறியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிரதமர் அலுவலகத்தை கடுமையாக கண்டித்தது. இதையடுத்து காவிரி நதி நீர் ஆணயைக் கூட்டத்தை இன்று கூட்டியது மத்திய அரசு.
அதன்படி இன்று மாலை 5 மணியளவில் பிரதமரின் இல்லத்தில் இக்கூட்டம் கூடியது. இதில் முதல்வர் ஜெயலலிதா, மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான குழு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான குழு, கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் தலைமையிலான குழு கலந்து கொண்டது.
கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால் அவருக்குப் பதில் அந்த மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் கலந்து கொண்டார்.
9 ஆண்டுகளுக்குப் பிறகு
காவிரி நதி நீர் ஆணையம் கடைசியாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில்தான் கூட்டப்பட்டது. அதன் பின்னர் 9 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது முதல் முறையாக கூட்டப்பட்டுள்ளது. இது ஆணையத்தின் 7வது கூட்டமாகும்.
இன்றைய கூட்டத்தில் தமிழகத்தின் தேவையை ஆணித்தரமாக முதல்வர் ஜெயலலிதா எடுத்து வைப்பார். அத்தோடு மத்திய அரசின் மெத்தனத்தையும் அவர் கடுமையாக சாடிப் பேசக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கடந்த 1997ம் ஆண்டு காவிரி நதி நீர் ஆணைய்ம் அமைக்கப்பட்டது. அதன் பிறகு மொத்தம் 6 முறை மட்டுமே இந்த ஆணையம் கூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று கூட்டப்படும் 7வது கூட்டத்தில் பிரதமரையும், மத்திய அரசையும் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக குறி வைக்கக் கூடும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக