வெள்ளி, செப்டம்பர் 21, 2012

கூடங்குளம்:கதிர்வீச்சு ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி !

Supreme Court poses searching queries to Centre on Kudankulamபுதுடெல்லி:கூடங்குளம் அணு உலை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியை எழுப்பியுள்ளது. கூடங்குளம் அணு உலை செயல்படுவதற்குத் தடை விதிக்கமுடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா
ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடங்குளம் அணு உலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் இருந்து கதிர்வீச்சு ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? 1984-ம் ஆண்டு போபாலில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. அதன் பாதிப்பு தற்போதும் உள்ளது. அதுபோன்று விபத்து ஏற்பட்டால் அதை அரசு எப்படி எதிர்கொள்ளும்? என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரனிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். மக்களின் உரிமையையும், அவர்களின் விருப்பத்தையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று கூறிய நீதிபதிகள், சுற்றுச் சூழல் பாதிப்பு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர்.
இவ்விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே, உத்தரவு பிறப்பிக்க முடியும் என்ற கூறிய நீதிபதிகள் அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மனுதாரர் சுந்தர்ராஜன் தரப்பில் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் வாதிட்டதாவது: அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் 17 பரிந்துரைகளில் 11 பரிந்துரைகள் மீறப்பட்டுள்ளன. அதுதவிர சுற்றுச்சூழல் விளைவு குறித்த ஆய்வு, பேரிடர் மேலாண்மை ஆய்வு உள்ளிட்ட அடிப்படை விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை.
ரஷியாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி, பயன்படுத்தப்பட்ட எரிபொருள் ரஷியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும்.
ஆனால், மீந்த அந்த எரிபொருளில் இருந்து மரண அபாயம் விளைவிக்கக் கூடிய கதிர்வீச்சு சில ஆண்டுகளுக்கு வெளியாகும் என்ற நிலையிலும், அதனை இந்தியாவிலேயே வைத்துக்கொள்ள இந்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்ற போதும், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றார் பிரசாந்த் பூஷண். முன்னதாக, கடந்த 13-ம் தேதி வழக்கு விசாரணையின் போது அணு உலையில் எரிபொருளை நிரப்புவதற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக