கூடங்குளம்: கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் முதல்வர் மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று உதயகுமார் தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்டம் இடிந்தகரை அருகே கூத்தங்குழியில் ரகசிய இடத்தில் தலைமறைவாக இருக்கும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்குழு தலைவர் உதயகுமார் அந்த கிராமத்தில் இருக்கும் பங்குதந்தை வீட்டில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது, கூடங்குளம் அணு மின் நிலைய
எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் வந்தார். அவரை தமிழக எல்லையான களியக்காவிளையில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது ஜனநாயக நாடா என்ற சந்தேகம் எழுகிறது. எங்கள் போராட்டத்திற்கு கேரளாவிலும் ஆதரவு பெருகி உள்ளது. அங்குள்ள பலரும் எங்களை தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 10ம் தேதி நடந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி காணாமல் போய் விட்டதாகவும், அதனை இடிந்தகரையைச் சேர்ந்த ஒருவர் எடு்த்து வைத்திருப்பதாகவும் அதைத் தேடி போலீசார் வர உள்ளதாகவும் செய்திகளை பரப்புகின்றனர். அந்த கலவரத்தின்போது பொதுமக்களின் உடைமைகள், பைபர் படகுகள், இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனைப் பற்றி பேசாமல் இத்தனை நாட்கள் கழித்து துப்பாக்கி காணாமல் போய்விட்டது என்று வீண் வதந்தி பரப்புவதை போலீசார் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த ஊர்களில் உள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறிய காயம் ஏற்பட்டால் கூட மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மக்களின் உணர்வுகளை உணர்ந்து முதல்வர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர் எங்களை பேச அழைத்தால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக