சனி, செப்டம்பர் 29, 2012

மேற்குவங்கத்தில் வெளிநாட்டவர்கள் கடைகள் திறக்க தடை. மம்தாவின் அதிரடியால் வால்மார்ட் அதிர்ச்சி !

வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், மேற்கு வங்கத்தில், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நடத்துவதை தடை செய்யும் தீர்மானம், அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் நுழைய முடியாதபடி சட்டசபையில் தீர்மானம் இயற்றப்பட்டது. சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் முடிவை, மத்திய அரசு சமீபத்தில் எடுத்தது. இந்த முடிவுக்கு, பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், மேற்கு வங்க முதல்வரும்,
திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி தான், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.மத்திய அரசின் முடிவை எதிர்த்து, மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த, தன் கட்சியை சேர்ந்த, ஆறு அமைச்சர்களை ராஜினாமா செய்யும்படி, மம்தா உத்தரவிட்டார். அத்துடன், ஐ.மு., கூட்டணிக்கு அரசுக்கு அளித்த ஆதரவையும், அதிரடியாக வாபஸ் பெற்றார்.இந்த விவகாரத்தில், மம்தாவை சமாதானப்படுத்த, காங்., மேலிடம் மேற்கொண்ட முயற்சிகள், பலன் அளிக்கவில்லை. அன்னிய முதலீடு விவகாரத்தில், காங்கிரசுக்கு நெருக்கடி கொடுத்ததுடன் நிற்காமல், அதற்கு எதிராக, மேற்கு வங்க மாநிலத்தில் அதிரடி காட்டும் நடவடிக்கையையும், மம்தா பானர்ஜி துவக்கியுள்ளார்.இதன் முதல் கட்டமாக, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், மேற்கு வங்கத்தில், கடைகள், வர்த்தக நிறுவனங்களை நடத்துவதற்கு தடை விதிக்கும் தீர்மானம், சமீபத்தில், அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனால், வால்மார்ட் போன்ற அன்னிய நிறுவனங்கள் மேற்கு வங்கத்தில் கால் பதிக்க முடியாது.இந்த தீர்மானத்தை, மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியாக உள்ள, இடதுசாரி கட்சிகள் ஆதரித்தாலும், அதில், சில திருத்தங்களை மேற்கொள்ளாததை கண்டித்து, சபையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இந்த தீர்மானம் குறித்து பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்தது.

முன்னதாக, தீர்மானத்தை தாக்கல் செய்து, மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மித்ரா பேசியதாவது:
பிரதமர் மன்மோகன் சிங், 1992ல், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் விவகாரம் குறித்து பேசினார்.

அப்போது அவர், அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை எடுத்தால், நாட்டில் உள்ள பல கோடி பேர், வேலை இழக்க நேரிடும் என்றார். அப்படி பேசிய மன்மோகன் தான், தற்போது, அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை எடுத்துள்ளார்.இவ்வாறு, அமித் மித்ரா பேசினார்.

சில்லரை வர்த்தத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை, பல்வேறு மாநில அரசுகள் எதிர்த்தாலும், மேற்கு வங்க சட்டசபையில் தான், அதை தடை செய்யும் வகையிலான தீர்மானம், முதலில் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து, மற்ற மாநிலங்களிலும், இதுபோன்ற தீர்மானம், விரைவில் நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக