சனி, அக்டோபர் 13, 2012

வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது: ஹைகோர்ட் அதிரடி !

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை (வயது 73) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்து அவருடைய மனைவி லீலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்திருந்தார். அதில் எனது கணவர் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கீழ் கைது செய்துள்ளனர். இதற்கான உத்தரவை 18.6.12 அன்று சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கான காரணமாக, அவர் மீது கூறப்பட்டுள்ள வழக்குக்கும் அவருக்கும் நேரடி தொடர்பு கிடையாது. 560 பக்கங்களைக் கொண்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து கமிஷனர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பெரும்பாலான ஆவணங்கள் தமிழில் இருப்பதால், தமிழரல்லாத அவரால் அதை முழுவதும் படித்து பார்த்து, திருப்தி அடைந்து உத்தரவிட்டு இருக்க முடியாது. உள்நோக்கத்தோடு உத்தரவுகளை பிறப்பித்து வீரபாண்டி ஆறுமுகத்தை ஜெயிலில் அடைத்துவிட்டனர். எனவே அந்த உத்தரவை சட்டத்துக்கு புறம்பானது என்று அறிவித்து அதை ரத்து செய்ய வேண்டும். என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் கே.என்.பாஷா, என்.பால்வசந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் கடந்த சில தினங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததில் நடைமுறைகள் சரிவர பின்பற்றப்படவில்லை என்று வீரபாண்டி ஆறுமுகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு அதற்கான சி.டி. ஆதாரத்தையும் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இன்று தீர்ப்பளித்தனர். வீரபாண்டி ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது செல்லாது. அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று தங்களின் தீர்ப்பில் உத்தரவிட்டனர்.
இதுபோல், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வீரபாண்டியின் உறவினர் பாரப்பட்டி சுரேஷ் மற்றும் கவுசிக பூபதி தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்களை சிறையில் அடைப்பதற்காக போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர். அவர்கள் இருவரின் மீதான குண்டர் சட்டத்தையும் நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
நீதிபதியின் உத்தரவை அடுத்து அவர்கள் மூவரும் இன்னும் சில தினங்களில் சிறையில் இருந்து விடுதலையாவார்கள் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக