2ஜி அலைக்கற்றை வழக்கின் முக்கியக் குற்ற வாளியான மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரும், அந்த வழக்கின் முக்கிய சாட்சியுமான சாதிக் பாட்சா, கடந்த ஆண்டு மர்மமான முறையில் தூக்கில் தொங்கி இறந்துபோனார். பல்வேறு புதிர்களையும் கேள்விகளையும் ஏற்படுத்திய அந்த மர்ம மரணம் பற்றிய அறிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் சி.பி.ஐ. தாக்கல் செய்தது. அதைப் பரிசீலித்த நீதிமன்றமும், சாதிக்
பாட்சாவின் மரணம் தற்கொலைதான் என்று வழக்கை முடித்துவைத்துள்ளது.
சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கை விவரங்களைப் பார்ப்போம்.
'பெரம்பலூர் மாவட்டத்தை பூர்வீகமாகக்கொண்ட நடுத்தரவர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த சாதிக் பாட்சா துணி வியாபாரியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் தன்னுடைய நண்பர்கள் கார்த்திகேயன், கண்ணன், சுப்புடு ஆகியோருடன் சேர்ந்து, 1997-ம் வருடம் சாதிக் ரியல் எஸ்டேட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அந்தத் தொழிலில் 2001-ம் வருடம் சாதிக் பாட்சா மிகப் பெரிய இடத்தைப் பிடித்தார். அந்த சமயத்தில் பெரம்பலூர் மாவட்ட ஊர்க் காவல் படை ஏரியா கமாண்டராகவும் சாதிக் பாட்சா செயல்பட்டுவந்தார். அந்த நேரத்தில்தான், தி.மு.க. எம்.பி-யாகி இருந்த ஆ.ராசாவுடன் நட்பு ஏற்பட்டது. சாதிக்கின் தொழில் மற்றும் வசதி வாய்ப்புகளும் வேகமாக அதிகரித்தன.2004-ம் ஆண்டு சாதிக் பாட்சா தன்னுடைய குடும்பத்துடன் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். அங்கு 'கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கினார். நிர்வாக இயக்குநராக சாதிக்கும், இயக்குநராக அவருடைய மனைவி ரேகா பானுவும் செயல்பட்டனர். ஆ.ராசாவின் தயவுடன் அந்த நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைந்தது. இந்த நிலையில் ராசாவின் குடும்பத்தினர் அதில் நுழையத் தொடங்கினர். ராசாவின் மூத்த சகோதரர்களில் ஒருவரான கலியபெருமாள் நிறுவனத்துக்குள் அடியெடுத்துவைக்க... ரேகா பானுவின் இயக்குநர் பதவி கலியபெருமாள் வசம் போனது. ராசாவின் மூத்த சகோதரரும் வனத் துறை அதிகாரியுமான ராமச்சந்திரன், ராசாவின் அக்கா மகன் பரமேஸ்குமார் என மற்றவர்களும் நிறுவனத்துக்குள் நுழைந்தனர். 2009-ம் ஆண்டில் நிறுவனத்தின் அதிகாரம் முழுக்க முழுக்க ராசாவின் குடும்பத்தினர் கைக்குள் சென்றது. 010-ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஊழல் முறைகேடுகள் வெளிவரத் தொடங்கியதும் சாதிக் பாட்சாவுக்கும் பிரச்னைகள் தொடங்குகின்றன. அவருடைய வீடு, நிறுவனம், பெரம்பலூரில் உள்ள அவருடைய உறவினர்களின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டன. சாதிக் பாட்சா வெளி உலகுக்குத் தெரியவந்ததும் அப்போதுதான்.
தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் இரண்டு மகன்கள் மற்றும் மனைவியுடன் வசித்துவந்த சாதிக் பாட்சா, 2011-ம் வருடம் மார்ச் 16-ம் தேதி வீட்டில் பிணமாகத் தூக்கில் தொங்கினார். வெளியில் சென்றிருந்த அவருடைய மனைவி ரேகா பானு மற்றும் வீட்டு வேலைக்காரர்கள் கதவை உடைத்துத்தான் சாதிக் பாட்சாவின் உடலை வெளியில் கொண்டுவந்தனர். சாதிக் தற்கொலை செய்துகொள்ளும் முன் எழுதிவைத்த கடிதத்தையும் அவர்கள் கைப்பற்றினர்.
அதன் பிறகு, சாதிக்கின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. போஸ்ட்மார்ட்டம் உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டு, அது தற்கொலை என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதில் பல கேள்விகள் எழுந்ததால், வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது.
சாதிக் பாட்சாவின் மனைவி மற்றும் அவருடைய நண்பர்கள் அனைவருக்கும் உண்மை கண்டறியும் சோதனை, கடிதம் உண்மையா என்பது பற்றி கையெழுத்து நிபுணர்களின் சோதனை, உடலில் இருந்து கைப்பற்றப்பட்ட சாம்பிள்கள் எல்லாம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு நடத்தப்பட்ட சோதனை... என அனைத்து சோதனை முடிவுகளும் இது தற்கொலைதான் என்று உறுதிப்படுத்தின. 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தால் சாதிக் பாட்சா மன உளைச்சலில் இருந்ததாலும், இதையடுத்து அவருடைய நண்பர்கள் பலர் அவரைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாலும் தற்கொலை செய்துகொண்டார்’ என்று முடிக்கிறது சி.பி.ஐ-யின் அறிக்கை.
இந்த அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள சாதிக் பாட்சாவின் மனைவியின் வாக்குமூலத்தில் சில சர்ச்சைக்குரிய பகுதிகள் உள்ளன.
'தன்னுடைய கணவர் 2ஜி வழக்கில் அப்ரூவராக மாறப்போவதாக தன்னிடம் தெரிவித்ததாகவும், ராசாவின் மூத்த சகோதரரும் வனத் துறை அதிகாரியுமான ராமச்சந்திரன் தன்னுடைய கணவரை மிரட்டியதாகவும்’ தெரிவித்துள்ளார். ஆனால், சி.பி.ஐ. அறிக்கையில் இதற்கான எந்தப் பதிலும் இல்லை. அதேபோல், சாதிக்பாட்சா எழுதிய கடிதத்தில் என்ன உள்ளது என்பது பற்றியும் சி.பி.ஐ. தன்னுடைய அறிக்கையில் எந்த இடத்திலும் சொல்லவில்லை. சாதிக் பாட்சாவின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர் டெக்கால் இப்போதுவரை முன்னுக்குப் பின் முரணான தகவல்களையே தெரிவித்து வருகிறார். அதுபற்றிய எந்த தெளிவான விவரங்களும் சி.பி.ஐ. அறிக்கையில் இல்லை.
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை கொடுக்கப் போவது யாரோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக