சனி, அக்டோபர் 20, 2012

திருவனந்தபுரம்: அபுதாபி விமான காக்பிட்டுக்குள் நுழைந்த பயணிகள்: கடத்தல் முயற்சி தகவல் தந்த பைலட் !

திருவனந்தபுரம்: அபுதாபியில் இருந்து திருவனந்தபுரம் வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளுக்கும் பைலட்டுகளுக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது. இதையடுத்து பயணிகள் காக்பிட்டுக்குள் நுழைய முயல, விமானத்தை கடத்த முயற்சி நடப்பதாக விமானி தகவல் தர, விமான நிலைய பாதுகாப்புப் படையினர் விமானத்திற்குள் நுழைய பெரும் களேபரம் நடந்தது. இன்று
காலை அபுதாபியில் இருந்து கொச்சிக்குக் கிளம்பிய ஏர் இந்தியா விமானம் (விமான எண் 4422) கொச்சியில் வானிலை மிக மோசமாக இருந்ததால், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. சுமார் 3 மணி நேரம் ஆகியும் விமானம் அங்கேயே நின்றிருந்தது. பயணிகளையும் இறங்கவிடவில்லை. வானிலை சரியானவுடன் விமானம் கிளம்பும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், 3 மணி நேரம் உணவோ, காபியோ, தண்ணீரோ கூட தரவில்லை விமான ஊழியர்கள்.
இந் நிலையில் காலை 6.30 மணியளவில் எல்லோரும் விமானத்தை விட்டு இறங்குங்கள், இந்த விமானம் கொச்சி செல்லாது, நீங்கள் பஸ்ஸோ, காரோ பிடித்து ஊர் போய் சேருங்கள் என்று விமானிகள் அறிவித்தனர்.
இதனால் பயணிகள் கடும் டென்சனான நிலையில் திடீரென தங்களது டூட்டி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறிய பைலட்டுகள் அனைவரையும் இறங்கிச் செல்லுமாறு கூறிவிட்டு, அவர்களும் கீழே இறங்க முயன்றனர்.
இதனால் பயணிகள் விமானிகளிடம் கேள்வி எழுப்ப, எங்கள் டூட்டி நேரம் முடிந்துவிட்டது என்று மட்டும் கடுகடு முகத்துடன் கூறிவிட்டுக் கிளம்பினர். பயணிகளிடம் மரியாதையாகக் கூட பேசவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து பயணிகள் விமானிகளைத் தடுத்தனர். விமானிகள் காக்பிட் அறை வாசலில் நின்று பதில் சொல்லிக் கொண்டிருந்த நிலையில், சில பயணிகள் விமானிகளை மிகவும் நெருங்கி காக்பிட்டுக்குள்ளேயே காலை வைத்துவிட்டனர்.
இதையடுத்து விமானத்தை கடத்த முயல்கிறார்கள் என்பதை தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தரும் பட்டனை விமானிகள் அழுத்தினர். இதனால் விமானக் கடத்தலுக்கு முயற்சி நடப்பதாக நினைத்த கட்டுப்பாட்டு அறையினர் உடனடியாக விமான நிலைய பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் தர, அவர்கள் துப்பாக்கிகளுடன் விமானத்துக்குள் நுழைந்தனர்.
இதனால் திருவனந்தபுரம் விமான நிலையமே இன்று அல்லோலப்பட்டது.
போலீசாரும் பாதுகாப்புப் படையினரும் விமான நிலைய அதிகாரிகளும் வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தினர். விமானிகளை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
இந்த விவகாரத்தில் டெல்லியில் இருந்து கிளியரன்ஸ் தரப்பட வேண்டும் என்பதால் விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே நின்று கொண்டிருந்தது.
ஏற்கனவே அபுதாபியில் இருந்தே இந்த விமானம் 3 மணி நேரம் தாமதமாகக் கிளம்பியுள்ளது. இதனால் அதிகாலை 3.30 மணியில் இருந்து பகல் 1.30 மணி வரை கிட்டத்தட்ட 10 மணி நேரமாக விமானத்திலேயே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் வேறு இரு பைலட்டுகள் வரவழைக்கப்பட்டு, அந்த விமானம் கொச்சி கிளம்பிச் சென்றது.
கொச்சியிலும் தொடர்ந்த 'சோதனை':
ஆனால், கொச்சி விமான நிலையம் வந்தடைந்த பின்னரும் பயணிகளுக்கு சோதனை போகவில்லை.
கொச்சி விமான நிலைய அதிகாரிகள் பயணிகளை நிறுத்தி வைத்து, 
திருவனந்தபுரத்தில் என்ன நடந்தது என்று கேள்விகளைக் கேட்டும், காக்பிட்டுக்குள் நுழைந்தது யார் என்றும் தீவிரமாக விசாரித்தனர்.

ஒருகட்டத்தில் பயணிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதமே ஏற்பட்டுவிட்டது.
விமானத்தை நாங்கள் கடத்திவிட்டதாக பைலட்டுகள் கூறியது தவறு, உண்மையில் எங்களைத் தான் ஏர் இந்தியா கடத்திவிட்டது என்றனர் பயணிகள்.
இதற்கிடையே பயணிகளுடனான மோதலை கடத்தலாக திசை திருப்பி பிரச்சனையை பெரிதாக்கிய பைலட்டுகள் இருவர் மீதும் துறைரீதியிலான நடவடிக்கை வரும் என்று தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு கேரள அரசும் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக