தென் அமெரிக்க நாடான, வெனிசுலாவில், நடந்த தேர்தலில், அதிபர் ஹக்கோ சாவெஸ், நான்காவது முறையாக, வெற்றி பெற்றுள்ளார். வெனிசுலா நாட்டின் அதிபராக, ஹக்கோ சாவெஸ், 1998ம் ஆண்டுமுதல், பதவி வகித்து வருகிறார். அதிபர் தேர்தல், நேற்றுமுன்தினம் நடந்தது. சோஷலிஸ்ட் கட்சி சார்பில், ஹக்கோ சாவெஸ் மீண்டும் போட்டியிட்டார். 14 ஆண்டுகளாக, ஆட்சியில்
உள்ள சாவெசை எதிர்த்து, நீதிக் கட்சியின் சார்பில், ஹென்ரிக் கேப்ரில்ஸ் போட்டியிட்டார். ஆறாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தலில், 1.9 கோடி மக்கள் நேற்று முன்தினம் ஓட்டளித்தனர். புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வரும் சாவெஸ், இந்த காரணத்தால் மக்களின் அனுதாபத்தைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. ஹக்கோ சாவெஸ், 54 சதவீத ஓட்டுகளும், ஹென்ரிக் கேப்ரில்ஸ் 44 சதவீத ஓட்டுகளும் பெற்றனர்.
தேர்தலில் தோற்றதை கேப்ரில்ஸ் ஒப்புக்கொண்டார். அதிபர் சாவெஸ் வெற்றி பெற்றதை, அவரது ஆதரவாளர்கள், காரகாஸ் நகர தெருக்களில் ஆடிப்பாடியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர். அதிபருக்கு வாழ்த்து கூறியுள்ள ஹென்ரிக், "இந்த தோல்வியால், துவண்டு விடவேண்டாம்; பல இடங்களில் விதை விதைத்துள்ளோம். அவை நிச்சயமாக பல மரங்களாக வளரும்' என, தனது ஆதரவாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக