வெள்ளி, அக்டோபர் 19, 2012

கூடங்குளம் அணு உலைக் கழிவுகளை எப்படி பாதுகாக்க போகிறீர்கள்? – உச்சநீதிமன்றம் கேள்வி !

டெல்லி:கூடங்குளம் அணு உலைக் கழிவுகளை எப்படி பாதுகாக்க போகிறீர்கள்? அதனை எங்கு சேமித்து வைக்கப் போகிறீர்கள்? அவை பாதுகாப்பானதா? அதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாதா ஆகியவை குறித்து விளக்கமாக பதிலை அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நாட்டில் உள்ள மற்ற அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட
எரிபொருளின் நிலை குறித்து பதில் மனு தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. அப்போது, கூடங்குளம் அணு மின் நிலையத்தை நிர்வகிக்கும் இந்திய தேசிய அணுசக்திக் கழகம் (NPCIL) சார்பில் மூத்த வழக்கறிஞர் ரோஹின்டன் நாரிமன் ஆஜராகி முன்வைத்த வாதம்: “மத்திய அரசு நியமித்த 15 பேர் கொண்ட நிபுணர் குழு கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆய்வு செய்தது. அக்குழு தனது அறிக்கையைக் கடந்த ஆண்டு டிசம்பரில் தாக்கல் செய்தது. அதில், வருங்கால சூழலுக்குத் தக்கபடி அணுஉலை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், அவரது அறிவியல் ஆலோசகரும் விஞ்ஞானியுமான வி. பொன்ராஜ் ஆகியோர் அணு உலையைப் பார்வையிட்டு கூடங்குளத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறியுள்ளனர். சுனாமி பேரலை தாக்கினாலோ, பயங்கரவாதிகள் விமானத்தை மோதச் செய்து தாக்குதல் நடத்த முயன்றால் கூட எந்த பாதிப்பும் ஏற்படாத அளவுக்கு கூடங்குளம் அணு உலை பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலை 40 ஆண்டுகள் பழமையானது. அதனுடன் கூடங்குளம் அணுஉலையை ஒப்பிடக் கூடாது. கூடங்குளத்தில் அணுஉலை செயல்பட பயன்படுத்தப்படும் எரிபொருளை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் கடைப்பிடிக்கப்படுகிறது.” என்றார் நாரிமன். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பயன்படுத்தப்பட்ட எரிபொருளைச் சேமித்து வைக்கும் வசதி கூடங்குளத்தில் எந்த அளவுக்கு செய்யப்பட்டுள்ளது?” என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த நாரிமன், “பயன்படுத்தப்பட்ட எரிபொருளை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 7 ஆண்டுகளுக்குக் குளிரூட்டிய பிறகே மறுசுழற்சிக்குப் பயன்படுத்த முடியும். அதற்கான வசதிகள் கூடங்குளத்தில் உள்ளன. இந்தியாவில் உள்ள 20 அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் இரண்டு நிலையங்களில் வைத்து மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது” என்றார். அவரது பதிலால் திருப்தியடையாத நீதிபதிகள், “பயன்படுத்தப்பட்ட எரிபொருள் கூடங்குளத்தில் இருந்து ரயில், சாலை அல்லது எந்த வகை போக்குவரத்து மூலமாகக் கொண்டு செல்லப்படும்? இந்தியாவில் உள்ள பிற அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் என்ன செய்யப்படுகிறது? பயன்படுத்தப்பட்ட எரிபொருளைச் சேமிப்பதால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாதா? இவ்வாறு செய்வது பாதுகாப்பானதா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை விளக்கி மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவில், பயன்படுத்தப்பட்ட எரிபொருளை அணுமின் நிலையத்தில் வைத்திருப்பதாலும் அதை மறுசுழற்சிக்காகக் கொண்டு செல்வதாலும் ஆபத்து நேராதா என்ற கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் எவ்வாறு களையப்படும்? ஃபுகுஷிமாவில் சுனாமி தாக்கியபோது அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் அதிர்வு உணரப்பட்டது. அந்த அதிர்வின் அளவையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் கணக்கிட்டுப் பதில் அளிக்க வேண்டும் ” என்று உத்தரவிட்டனர். முன்னதாக, இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் சார்பில் வாதிட்ட அட்டர்னி ஜெனரல் வாகனவதி, “கூடங்குளம் அணு மின் நிலையத்தை இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்த பிறகே அணுஉலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் அங்கு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக