செவ்வாய், அக்டோபர் 09, 2012

ஸ்டெம் செல்' ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஜப்பான், பிரிட்டன் நிபுணர்களுக்கு நோபல் பரிசு !

ஜப்பானைச் சேர்ந்த, ஷின்யா யமனாகா, பிரிட்டனைச் சேர்ந்த, ஜான் குர்டான் ஆகியோருக்கு, இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, வழங்கப்பட்டு வருகிறது.உலக அமைதிக்காகவும், மக்களுக்கும்,
தன்னலமற்ற சேவையாற்றுபவர்களுக்கும், சமாதான விருது வழங்கப்படுகிறது. மருத்துவத் துறையில் வரப்பிரசாதமாகக் கருதப்படும், "ஸ்டெம் செல்' குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட, ஜப்பானைச் சேர்ந்த ஷின்யா யமனாகா, பிரிட்டனைச் சேர்ந்த ஜான் குர்டான் ஆகியோருக்கு, இந்த ஆண்டுக்கான, நோபல் பரிசு, நேற்று அறிவிக்கப்பட்டது. ஜப்பானின், கியோட்டோ பல்கலைக் கழக பேராசிரியராக இருப்பவர் யமனாகா, கேம்ப்ரிட்ஜ் கல்வி மையத்தில் பணியாற்றுபவர் குர்டான். "ஸ்டெம் செல்' மூலம் நோயின் தன்மை, அதை குணப்படுத்தும் விதம் குறித்து, இருவரும் ஆராய்ச்சி செய்துள்ளனர்.
ஐரோப்பாவில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, நோபல் பரிசுத் தொகை குறைக்கப்பட்டு விட்டது. கடந்த ஆண்டு வரை நோபல் பரிசு பெறுபவர்களுக்கு, 6.85 கோடி ரூபாய் ரொக்கமாக அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு இந்த தொகை, 5.5 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த தொகை, இரு விஞ்ஞானிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக