வெள்ளி, அக்டோபர் 05, 2012

என்று தணியும் இந்த ஜாதிக் கொடுமைகள்? – ரூ.15 சம்பளத்திற்கு 42 ஆண்டுகளாக அரசுப் பணி செய்யும் தலித் பெண்கள் !

ரூ.15 சம்பளத்திற்கு 42 ஆண்டுகளாக அரசுப் பணி செய்யும் தலித் பெண்கள்உடுப்பி : பா.ஜ.க. ஆளும் கர்நாடகாவில் ஜாதிக் கொடுமைகள் இன்னும் தலைவிரித்தாடுவதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். கர்நாடகாவிலுள்ள உடுப்பியில் அக்கு, லீலா ஆகிய இரண்டு தலித் பெண்கள் கடந்த 42 வருடங்களாக ரூ. 15 மாதச் சம்பளத்திற்கு அரசு பெண்கள் ஆசிரியை பயிற்சிப் பள்ளியில் துப்புரவுத் தொழிலாளிகளாகப் பணியாற்றி வருகின்றனர். ஆம்! மாதம் வெறும் 15 ரூபாய்க்கு… அதுவும் நீண்ட 42 வருடங்களாக… நம்பவே முடியவில்லையா? அரசு அதிகாரிகளின் அதிகார வெறி, ஜாதி வெறி அறிய மேலும்
படியுங்கள்.
அந்த இரு அபலைப் பெண்களின் பணிகளும் “முறைப்படுத்தப்படும்” என்று பலமுறை அரசு அதிகாரிகள் வாக்களித்துள்ளனர். ஆனால் 4 தசாப்தங்கள் கடந்தும் ஒன்றும் நடக்கவில்லை. காரணம், தலித்துகள்தானே என்ற அலட்சியம்.
இந்த இரு அபலைப் பெண்களும் கர்நாடகா நிர்வாக ஆணையத்தை (Karnataka Administrative Tribunal – KAT) கடந்த 2001ம் ஆண்டு அணுகினர். அதன் பிறகு நடந்த கொடுமை என்ன தெரியுமா?
கிடைத்துக் கொண்டிருந்த அந்த 15 ரூபாய் ஈனச் சம்பளத்தையும் கர்நாடகா அரசின் கல்வித் துறை நிறுத்திவிட்டது!
இவர்களின் இழி நிலை இப்பொழுதாவது வெளிவந்ததற்குக் காரணம் ரவீந்திரனாத் ஷான்பாக் என்ற மனித உரிமையாளர். இவர் உடுப்பியை மையமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் பாதுகாப்பு நிறுவனத்தின் (Human Rights Protection Foundation) தலைவர். இவர் இந்தக் கொடுமையை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களைச் சந்தித்தஅவர், “உச்சநீதிமன்ற உத்தரவு, கர்நாடக உயர்நீதிமன்றம், கர்நாடகா நிர்வாக ஆணையம் ஆகியவை இந்தப் பெண்களுக்குச் சாதகமாக தீர்ப்பு கூறிய பிறகும், இவர்களின் பணிகளை முறைப்படுத்தும்படி அரசுக்கு அறிவுறுத்திய பிறகும் இன்று வரை இந்த உத்தரவை கர்நாடக அரசு அமுல் படுத்தவில்லை” என்று கூறினார்.
இதற்கிடையில் நடக்கும் கொடுமை என்ன தெரியுமா? இந்த இரண்டு அபலைப் பெண்களும் ஆசிரியைப் பயிற்சிப் பள்ளியின் 21 கழிவறைகளை இன்று வரை சுத்தம் செய்து வருகின்றனர். அதாவது ஒரு பைசா சம்பளம் தரப்படாமல் அவர்கள் இந்த வேலையைச் செய்கின்றனர்.
“கர்நாடகா நிர்வாக ஆணையம் இவர்களின் பணிகளை 90 நாட்களுக்குள் முறைப்படுத்திடவேண்டும் என்று கடந்த 2003ம் ஆண்டு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. கர்நாடக உயர்நீதி மன்றம் அவர்களுக்குரிய சம்பளத்தை வழங்கிடுமாறு 2004ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவுகள் எதுவும் அமுல்படுத்தப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு அறிவிக்கைகள் அளிக்கப்பட்டன” என்று கூறிய ரவீந்திரனாத் ஷான்பாக் அடுத்து கூறியதுதான் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
“அவர்களுக்குரிய சம்பளத்தைக் கொடுக்க வேண்டிய அரசு, சிறப்பு விடுப்பு மனுவை 2005ல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றம் மீண்டும் இந்த அபலைப் பெண்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு கூறியது. ஆனால், இவையெல்லாம் நடந்தும், இன்னும் இந்தப் பெண்கள் அவர்களுக்குரிய சம்பளம் கிடைக்கவில்லை. இப்பொழுது இந்த அரசு அதிகாரிகள் என்ன சொலகிறார்கள் தெரியுமா? இந்தப் பெண்கள் ஓய்வு பெறும் வயதை அடைந்துவிட்டதால் இவர்கள் இந்தப் பணிக்கே தகுதியில்லாதவர்கள் என்று கூறிவிட்டது.” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக