வெள்ளி, அக்டோபர் 12, 2012

இஸ்ரேல் கொலை செய்த ரேச்சல் கோரியின் பெற்றோருக்கு அமைதி விருது. . .

வாஷிங்டன்:காஸாவில் ஃபலஸ்தீனர்களின் வீடுகளை இடிக்க வந்த சியோனிச இஸ்ரேல் இராணுவ புல்டோசரைத் தடுக்கும்பொழுது படுகொலை செய்யப்பட்ட ரேச்சல் கோரியின் பெற்றோருக்கு அமைதி விருது வழங்கப்பட்டது. ரேச்சல் கோரியின் சார்பாக அவரின் பெற்றோர்கள் கிரெய்க் கோரியும், சிண்டி கோரியும் 2012 அமைதிக்கான லென்னன் ஓனோ கிராண்ட் (LennonOno Grant for Peace) விருதைப் பெற்றுக்கொண்டனர். ஐஸ்லாந்திலுள்ள
ரெய்க்ஜாவிக் என்ற இடத்தில் கடந்த அக்டோபர் 9ம் தேதி யோகோ ஓனோவால் இந்த விருது வழங்கப்பட்டது.
ஃபலஸ்தீன் காஸாவில் அங்குள்ள சொந்த மண்ணின் மைந்தர்களின் வீடுகளை இஸ்ரேலிய யூத வெறி பிடித்த இராணுவம் புல்டோசர்களைக் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்குவது அன்றாட நிகழ்வு. இந்த அக்கிரமத்தைத் தட்டிக் கேட்கும் முகமாக அமெரிக்காவில் ISM என்ற இண்டர்நேஷனல் சாலிடாரிட்டி மூவ்மெண்ட் (Intrenational Solidority Movement) என்ற அமைப்பு களத்தில் இறங்கியது.
இந்தக் கொடுமையை உலகுக்கு உணர்த்தி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது இந்த அமைப்பு. அதன் ஒரு பகுதியாக அதன் ஆண், பெண் உறுப்பினர்கள் நேரடியாக ஃபலஸ்தீனுக்கே சென்று தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.
அந்த அடிப்படையில் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஒலிம்பியாவைச் சேர்ந்த 23 வயதே நிரம்பிய ரேச்சல் கோரி என்ற இளம் பெண் தன் நண்பர்களோடு காஸாவுக்குச் சென்று, அங்கேயே தங்கி ஃபலஸ்தீனர்களின் வீடுகளைத் தகர்க்கும் புல்டோசர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
கடந்த 2003 மார்ச்16 அன்று காஸா-எகிப்து எல்லைக்கருகிலுள்ள ரஃபா என்ற இடத்தில் ஒரு வீட்டை நசுக்குவதற்கு எமனைப் போல் நெருங்கி வந்துகொண்டிருந்த ஒரு புல்டோசரின் முன்பு நின்று கொண்டு அதனைத் தடுக்க முனைந்த ரேச்சலை ஈவு இரக்கமில்லாத அந்த புல்டோசர் ஓட்டுனர், அதனை நிறுத்தாமல் அவள் மேல் ஏற்றி உயிரோடு கொன்றான்.
ரேச்சல் கோரியின் பெற்றோர்கள் இந்தப் படுகொலைக்கெதிராகத் தொடுத்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி “அது வேண்டுமென்று செய்யப்பட்ட கொலையல்ல, அது ஒரு விபத்தே!” என்று வடக்கு இஸ்ரேலிலுள்ள ஹைஃபா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
ரேச்சல் கோரியின் படுகொலைக்குப் பின் அவரது நினைவாக “ரேச்சல் கோரி நிறுவனம்” (Rachel Corrie Foundation) என்ற அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது. அமைதிப் பணிகளை மேற்கொள்ளும் இந்த அறக்கட்டளைக்கு அமைதிக்கான விருதுடன் ரொக்கப் பணமும் வழங்கிய “இமேஜின் பீஸ்” (Imagine Peace) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“ரேச்சல் கோரி கொல்லப்பட்டவுடன் முடங்கிப் போகாமல் இந்த அறக்கட்டளை ரேச்சலின் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றது. மக்களிடையே தொடர்புகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகள், பரஸ்பரம் புரிந்துணர்வு, மரியாதையை உருவாக்கும் நிகழ்ச்சிகள், உள்ளூர், உலக மக்களிடையே உதவி, ஒத்துழைப்பு மனப்பான்மை மலரும் நிகழ்ச்சிகள் என்று நல்ல பல செயல்களை இந்த அறக்கட்டளை செய்து வருகின்றது. உலக மக்களிடையே அமைதியை உருவாக்கும் விதமாக மக்களின் அடித்தட்டு வரை போய் மனித உரிமைகள், சமூக, பொருளாதார, சுற்றுச்சூழலுக்கான நீதி போன்றவற்றை ஆதரித்தும், ஊக்குவித்தும் வருகின்றது இந்த அறக்கட்டளை.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக