வியாழன், அக்டோபர் 04, 2012

சி.வி.சண்முகத்தின் அமைச்சர் பதவி பறிப்பு; கட்சி பதவியும் காலி- புதிய அமைச்சராக மோகன் நியமனம் !

 Jayalalithaa Removes Cv Shanmugam From Cabinet சென்னை: இன்று காலை விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து சி.வி.சண்முகத்தை நீக்கிய முதல்வர் ஜெயலலிதா இன்று பிற்பகலில் அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கினார்.காலையில் சண்முகத்தை தூக்கிவிட்டு விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக டாக்டர் ஆர்.லட்சுமணனை ஜெயலலிதா நியமித்தார். இந் நிலையில் பிற்பகலில் சட்டம் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் சி.வி. சண்முகத்தை
நீக்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார். புதிய அமைச்சராக சங்கராபுரம் தொகுதி பி.மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அரசின் தலைமைக் கொறடாவுமாக உள்ளார். இப்போது இவருக்கு ஊரகத் தொழிற்துறை அமைச்சர் பதவியும் தரப்பட்டுள்ளது.
மேலும் சில அமைச்சர்களின் பொறுப்புகளும் மாற்றப்பட்டுள்ளன.
சி.வி.சண்முகம் வகித்து வந்த வந்த வணிகவரித்துறை, பதிவுத்துறை ஆகியவை அமைச்சர் பி.வி. ரமணா வசம் தரப்பட்டுள்ளன.
சமூக நலத்துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் பா.வளர்மதிக்கு சத்துணவுத் திட்டத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை, ஊரகத் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்த எம்.சி.சம்பத்தின் இலாகா மாற்றப்பட்டு, அவருக்கு சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் என்.ஆர்.சிவபதிக்கு கூடுதலாக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை, லஞ்ச ஒழிப்பு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஊரக தொழில்துறை புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பி.மோகன் வரும் 6ம் தேதி காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொள்கிறார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்படி கவர்னர் ரோசையா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின் நடக்கும் 8வது அமைச்சரவை மாற்றம் இதுவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக