செவ்வாய், அக்டோபர் 09, 2012

நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்ட மாலத்தீவு முன்னாள் அதிபர் கைது !

மாலத்தீவு முன்னாள் அதிபர், முகமது நஷீத், நேற்று கைது செய்யப்பட்டார். மாலத்தீவு ஜனநாயக கட்சியின் நிறுவனர் முகமது நஷீத். ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானவர். தன்னை கண்டித்து கேலி சித்திரம் வரைந்த நபரை, ஜாமினில் விடுவித்த நீதிபதியை கைது செய்ய இவர் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து, எதிர்க்கட்சியினர், நாடு தழுவிய தொடர் போராட்டத்தில்
ஈடுபட்டனர். ரேடியோ நிலையங்கள் கைப்பற்றப்பட்டன. தனக்கு எதிராக புரட்சி உருவாவதாக கூறிய நஷீத், அதிபர் பதவியிலிருந்து கடந்த ஆண்டு விலகினார். நீதிபதியை, கைது செய்ய உத்தரவிட்ட குற்றத்துக்காக, இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். இதற்காக இரண்டு முறை வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
நேற்று முன்தினம், ஹல்ஹுமாலி தீவின், மாஜிஸ்திரேட், நஷீத்தை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, நஷீத் நேற்று கைது செய்யப்பட்டார். நஷீத் கைது செய்யப்பட்டதற்கு, அவரது ஜனநாயக கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் நஷீத் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும். அது மட்டுமல்லாது, அவர் நிரந்தரமாக, தேர்தலில் போட்டியிட முடியாது.அடுத்த ஆண்டு, ஜூலையில், மாலத்தீவில் பொதுத் தேர்தல் நடக்க உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக