பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதை மீறும் வகையில் மாக இன்று இரவு 8 மணி முதல் திடீரென தண்ணீர் திறப்பை நிறுத்திவிட்டது கர்நாடக அரசு. சம்பா பயிரைக் காக்கும் வகையில் கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு 2 டிஎம்சி நீரை திறந்து விட உத்தரவிட
வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து ஆரம்பத்தில் பிரதமர் கமுக்கமாக இருந்தார். பின்னர் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. அப்போது பிரதமர் அலுவலகத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்தது உச்சநீதிமன்றம். இதையடுத்து பிரதமர் தலைமையில் காவிரி நீர் ஆணையம் கூடியது. அக்கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கையை முழுமையாக ஏற்காத பிரதமர், விநாடிக்கு 9000 கன அடி நீரைத் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார். இதைக் கூட கர்நாடகம் ஏற்காமல், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் வெளிநடப்புச் செய்தது.
செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 15 வரை நீர் விட பிரதமர் உத்தரவிட்டிருந்தார். பிரதமரின் உத்தரவை ஏற்க மறுத்த கர்நாடகா செப்டம்பர் 20ம் தேதியே காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவதை நிறுத்தியது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடியது தமிழக அரசு. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடகததிற்குக் கடும் கண்டனம் தெரிவித்தது. பிரதமரின் உத்தரவை மதிக்காத செயலையும் அது கண்டித்தது. மேலும் தொடர்ந்து தண்ணீரைத் திறந்து விடுமாறும் அது உத்தரவிட்டது. இதையடுத்து மீண்டும் தண்ணீரைத் திறந்தது கர்நாடக அரசு. உச்சநீதிமன்ற உத்தரவின் படி அக்டோபர் 24ம் தேதி வரை, கர்நாடகம் நீர் தர வேண்டும்.
இந்த நிலையில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், பிரதமரின் உத்தரவில் தலையிட முடியாது என்று கூறிவிட்டது.
இந்தப் பின்னணியில் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள கர்நாடகத்தின் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் காங்கிரஸ் தலைவர்களும், கர்நாடக மத்திய அமைச்சர்களும் பிரதமரைச் சந்தித்துப் பேசி உத்தரவை மாற்றுமாறு கோரினர்.
அதேபோல தமிழகத்தின் மீது பாசம் அதிகம் உள்ளதாக அடிக்கடி தனக்குத்தானே கூறிக் கொள்ளும் வெங்கையா நாயுடு தலைமையிலான கர்நாடக பாஜக எம்.பிக்கள் குழுவும் பிரதமரைச் சந்தித்து முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்தது.
ஆனால் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது. மீண்டும் கூட்டம் கூடும்போதுதான் புதிய உத்தரவை பிறப்பிக்க முடியும் என்று பிரதமர் கூறி விட்டார்.
இந்த நிலையில்தான் இன்று திடீரென தண்ணீர் திறப்பை நிறுத்திவிட்டது கர்நாடக அரசு. மைசூர் கிருஷ்ணசாகர் அணையிலிருந்து வெளியேறி வந்த நீர் இரவு 8 மணியோடு நிறுத்தப்பட்டுவிட்டதாக கர்நாடக அரசின் தலைமைப் பொறியாளர் விஜய்குமார் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் உத்தரவு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஆகியவற்றை இதன் மூலம் மதிக்காமல் தூக்கிக் கடாசியுள்ளது கர்நாடக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக