நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் யுரேனியம் எரிபொருளை நிரப்பியுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் இது பொய்யான தகவல். உளவுத்துறையே திட்டமிட்டு இதைப் பரப்புவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம் என்று கூறியுள்ளார் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார். இதுகுறித்து அவர் கூறுகையில், கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணி முடிய 2 மாதங்கள் ஆகும் என்றும், மின் உற்பத்தி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும்
அணுசக்தி துறை தலைவர் சின்ஹா கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார். இந்த நிலையில் முதல் அணு உலையில்,யுரேனியம் நிரப்பும் பணி முடிந்துவிட்டதாக தகவல்களை பரப்பி வருகிறார்கள். அணுசக்தி துறை மிகப் பெரிய துறை, ஆனால் அத்துறையில் இருந்து முரண்பட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. உளவுத்துறை இவ்வாறு தகவல்களை திட்டமிட்டு பரப்புகிறதா? என்று தெரியவில்லை.
எவ்வாறு இருந்தாலும் கூடங்குளம் அணுஉலையை மூடும் வரை எங்கள் போராட்டம் தொடரும். ஜப்பானில் 52 அணுமின்நிலையங்களை மூடிவிட்டு, 2 அணுஉலைகளை மட்டுமே செயல்படுத்தி வருகிறார்கள். இதற்கும் அந்த நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி வருகிற 8-ந் தேதி கடல்வழியாக படகுகளில் சென்று முற்றுகையிடும் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். அணுஉலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மீனவர்கள் முற்றுகை போராட்டத்தை அறவழியில் நடத்துவார்கள். இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களும், கேரள மீனவர்களும் கலந்து கொள்கின்றனர். நானும் இப்போராட்டத்தில் பங்கேற்க உள்ளேன்.
மீனவர்கள் கடலுக்குள் முற்றுகை போராட்டம் நடத்தும் வேளையில், பெண்கள் கடற்கரையில் திரண்டு அறவழி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார் உதயக்குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக