வியாழன், டிசம்பர் 29, 2011

ஒய் திஸ் சினிமாவெறி பிரதமரே?


தனுஷை விருந்துக்கு அழைத்த பிரதமர் - ஒய் திஸ் கொலவெறி - இந்தச்செய்தியை வாசித்ததும் விரக்தியும் எரிச்சலும் ஏற்பட்டது. வேறு என்னங்க! நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் அழுத்திக்கொண்டிருக்கும் போது நமது பிரதமருக்கு இதெல்லாம் தேவையா? என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. ஏழைசொல்தான் அம்பலம் ஏறாதே! ஜப்பான் பிரதமர் யோஷிகியோ நோடாவுக்கு டெல்லியிலுள்ள தனது வீட்டில் நமது பிரதமர் இன்று விருந்தளிக்கிறார். இந்த விருந்தளிப்பில்
கலந்துகொள்ள நடிகர் தனுஷுக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. என்ன ஒரு கேவலம் பாருங்கள்!

ஒருநாட்டு பிரதமர் இன்னொரு நாட்டு முக்கிய தலைவர்களுக்கு விருந்தளித்து கவுரவப்படுத்துவது சாதாரணமாக எல்லா நாடுகளிலும் பின்பற்றப்படும் ராஜதந்திர நடைமுறை. இதன்மூலம் இருநாடுகளுக்கிடையேயான நட்புறவு, சுற்றுலா, வர்த்தகம் இவற்றை மேம்படுத்திக் கொள்ள உதவுகிறது. இதை தவறென்று சொல்லவில்லை. ஆனால், இதில் கலந்து கொள்ள சினிமா நடிகருக்கு அதுவும் பெண்களை இழிவுபடுத்தும் பாடலை குடிபோதையுடன் பாடி நடித்திருக்கும் ஓர் நடிகருக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் அதிர்ச்சியளிக்கிறது.

மற்றநாடுகளைப்போல் அல்லாது இந்தியப் பெண்கள் 'கல்லானாலும் கணவன்' என்று வாழ்நாளைக் கழிப்பவர்கள் என்பதால் உலகளவில் இந்தியப் பெண்மணிகளுக்கு தனிமரியாதை உள்ளது. ஆனால் இந்தப்பாடலின் தொடக்கம் அதை குழிதோண்டிப் புதைப்பதாக உள்ளது. பாடல்வரிகளிலுள்ள கொலவெறி'டி' இல் பெண்களுக்கு எதிரான சொல்லாடலைக் கையாண்டிருப்பதற்கு எதிராக பொதுநல அமைப்புகள் மட்டுமின்றி பெண்களுக்கான நல அமைப்புகள்கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. பிரதமரே 'கொலவெறி'பிரபலத்தைக் கண்டு பிரமித்துப்போயிருக்கும்போது பாவம் இவர்கள் என்ன செய்வார்கள்?!

சக இந்திய குடிமகன் என்ற முறையிலும் தனுஷின் தனிப்பட்ட திறமைகளுக்கு மதிப்பளித்து பிரதமர் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தால் வரவேற்றிருக்கலாம். கூடங்குளம் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்துவரும் திரு.உதயகுமார் அவர்களுக்கோ அல்லது பொதுமக்களின் பிரச்சினைகளுக்காகப் பாடுபட்டுவரும் வேறுயாரையும் கவுரவித்திருந்தால் பிரதமரின்மீதான நன்மதிப்பு உயர்ந்திருக்குமே! தமிழக அரசியலும் சினிமாவும் உடன்பிறவா சகோதரிகள். தமிழக முதல்வர்கள் பலரின் முகவரி கோடம்பாக்கம். இந்தக் கேடுகெட்ட சினிமா மோகம் நமது பிரதமரையும் விட்டுவைக்கவில்லையே என்று நினைத்து வருந்தாமல் இருக்க முடியவில்லை.

வெளிநாட்டு அதிபருக்கு அளிக்கும் மரியாதை விருந்தில் அழைத்து கவுரவிக்கப்படும் அளவுக்கு யாரிந்த தனுஷ்? சமூக பொறுப்புள்ள கருத்துக்கள் என்றைக்காவது இவர் நடித்த படங்களில் இருந்துள்ளதா? பள்ளி மாணவர்களை வழிகெடுக்கும் வகையில்தான் இவரது அறிமுகப் படம் இருந்தது. கூடுதலாக ஆபாசக் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. அந்தப்படம் கொடுத்த வசூல் காரணமாகவே பலர் அத்தகைய படங்களை எடுக்க ஆரம்பித்தனர். சமூக கருத்துக்களைச் சொல்லிவந்த இயக்குனர் சங்கர்கூட அதே டேஸ்டிலான 'பாய்ஸ்' படத்தை எடுக்க தனுஷின் முதல்படத்திற்குக் கிடைத்த வரவேற்பும் காரணமாக இருந்தது. அவரது திருமணம் மற்றும் அந்தரந்த வாழ்க்கையை நாகரிகம் கருதி இங்கு குறிப்பிடவில்லை.

பல்வேறு வகையிலும் எதிர்மறையான பிம்பமாகக் காட்சியளிக்கும் நடிகர் தனுஷை பிரதமருடன் விருந்துக்கு அழைத்த 'சினிமாவெறி' ஆலோசகரை களை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் இன்று பெண்களுக்கு எதிரான கொலைவெறி பாடலை பாடியவரை விருந்துக்கு அழைத்து கவுரவிக்கும் பிரதமர் அலுவலகம் நாளை, உண்மையான கொலைவெறியனுக்கும் அழைப்பு விடுக்கும்!.

ஆதங்கத்துடன்
பானுமதி, சென்னை-21.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக