வியாழன், டிசம்பர் 29, 2011

வடகொரியாவின் மறைந்த தலைவர் கிம் ஜாங் இல்லின் இறுதிச் சடங்கில் மக்கள் கதறல்


சடங்குகள், நேற்றையதினம் துவங்கின. அவரது இறுதி ஊர்வலத்தின் போது, சாலையின் இரு மருங்கிலும் திரண்டிருந்த மக்கள், கதறி அழுவதை, தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
வடகொரியாவை, 17 ஆண்டுகளாக ஆட்சி செய்த, கிம் ஜாங் இல்,69, கடந்த 17ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அன்று முதல், பியாங்யாங்கில் உள்ள கும்சுசன் அரண்மனையில், அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.
அவரது மகனும், அடுத்த தலைவருமான கிம் ஜாங் உன், அவரது மாமா சாங் சுங் டயீக் ஆகியோரும், அரசு மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நேற்று, கிம் ஜாங் இல்லின் இறுதிச் சடங்குகள் துவங்கின. இன்றும், இந்தச் சடங்குகள் தொடரும் என தெரிகிறது.
மிகப் பெரிய அளவிலான, கிம் ஜாங் இல் படம் வைக்கப்பட்ட ஒரு கார் முன்னே செல்ல, அவரது உடல் வைக்கப்பட்ட கண்ணாடிப் பேழை, மற்றொரு காரின் மேற்புறத்தில் வைக்கப்பட்டிருந்தது. பெட்டியைச் சுற்றிலும், வெள்ளை நிற மலர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இறுதி ஊர்வலத்தின் போது, சாலையின் இரு மருங்கிலும் திரண்டிருந்த மக்கள் வெள்ளம், துக்கத்தில் வெடித்து அழுவதையும், கிம் ஜாங் இல்லை நோக்கி கைகளை நீட்டி குமுறுவதையும், "அப்பா அப்பா' என்று அவரை நோக்கி கதறியதையும், தேசிய தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியது.
கும்சுசன் அரண்மனையில் இருந்து புறப்பட்ட, இந்த இறுதி ஊர்வலம் மொத்தம், 40 கி.மீ., தூரம் பயணம் செய்து, மீண்டும் அரண்மனைக்கு வந்து சேர்ந்தது. இறுதி ஊர்வலத்தில், கிம் ஜாங் இல் வைக்கப்பட்ட காரின் அருகில், அவரது மகன் கிம் ஜாங் உன், டயீக் ஆகியோர் நடந்து வந்தனர். அரண்மனை முன்னால், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் அணிவகுத்து, இறுதி மரியாதை செலுத்தினர்.
இறுதிச் சடங்குகளுக்கான நிகழ்ச்சி நிரல் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதால், இன்று என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் ராணுவ உயர் அதிகாரிகளின் பட்டியலில், டயீக்கின் பெயர் 19வதாக சேர்க்கப்பட்டிருந்தாலும், புதிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்குப் பின்னால், அவர் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அதிகார மாற்றத்தில், அவர் முக்கியத்துவம் வாய்ந்த பங்கு வகிப்பார் என்பது தெளிவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக