குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் சிறையில் அடைப்பு!
மாவோயிஸ்ட் இயக்கத்தை சார்ந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒரு பெண்மணியை வீட்டில் தங்கவைத்தார் எனக்கூறி ராஜஸ்தான் மாநிலத்தில் மனித உரிமை ஆர்வலரும், பி.யு.சி.எல் பொதுச் செயலாளருமான கவிதா ஸ்ரீவஸ்தவா மீது போலீஸ் நடவடிக்கைகள்!
பல்வேறு தீவிரவாத வழக்குகளில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு பி.டி.பி அரசியல் கட்சியின் தலைவரும், நோயாளியும், ஊனமுற்றோருமான அப்துல்நாஸர் மஃதனி சிறையில் அடைக்கப்பட்டு மனித உரிமைகள் மறுப்பு! -இந்திய திருநாட்டில் நடந்துக்கொண்டிருக்கும் அரசு பயங்கரவாதத்தின் சில கோரக்காட்சிகள் தாம் இவையெல்லாம்.
இத்தகைய நிகழ்வுகளையெல்லாம் தலைமையேற்று நடத்துவது ஹிந்துத்துவா பாசிஸ்டுகள் ஆளும் மாநில அரசுகளும், அவர்களுக்கு நாங்கள் என்ன சளைத்தவர்களா என கேட்கும் காங்கிரஸ் அரசுமாகும்.
சஞ்சீவ் பட்டை நரேந்திரமோடி வஞ்சம் தீர்ப்பதற்கு காரணம் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் நரேந்திரமோடியின் கொடூர முகத்தை அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததே!
அதேவேளையில் பி.யு.சி.எல் பொதுச் செயலாளர் கவிதா ஸ்ரீவஸ்தவா மீது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு பாய்வதற்கு காரணம் பரத்பூர் கலவரம் தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் என்ற நிலையில் அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக நடத்திய போராட்டமாகும். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், சட்டீஸ்கரில் ஹிந்துத்துவா பாசிச அரசுக்கு எதிராகவும் எழும் குரல்களை அடக்கி ஒடுக்கவே இத்தகைய அடாவடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
கர்நாடகா மாநிலத்தை ஆளும் பா.ஜ.க பாசிச அரசு பொய் வழக்கு ஒன்றை சுமத்தி அப்துல் நாஸர் மஃதனியை ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்துள்ளது. இது போதாது என மோடியின் தோழி ஜெயா ஆளும் தமிழகத்திலும் மேலும் ஒரு வழக்கை அவர் மீது சுமத்தியுள்ளனர்.
ஹிந்துத்துவா பாசிஸ்டுகள் ஆளும் மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும், பாசிஸ்டுகளுக்கு நெருக்கமானவர்கள் ஆளும் மாநிலங்களிலும் ஒடுக்கப்படும் சிறுபான்மையின, பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவர்களை அடக்கி ஒடுக்க முயல்வதைத்தான் இச்சம்பவங்கள் எடுத்தியம்புகின்றன.
குஜராத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாக காந்தீயவாதிகள் கூறும் குற்றச்சாட்டை மறுக்கவியலாது. சஞ்சீவ் பட்டை ஒரு தீவிரவாதியைப் போல நடத்துகிறார்கள் என அவரது மனைவி சுவேதா பட் குற்றம் சாட்டுகிறார்.
கவிதா ஸ்ரீவஸ்தவாவுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர சச்சார், தேசிய ஆலோசனை குழு உறுப்பினர் ஹர்ஷ் மந்தர், சமூக சேவகி ஷப்னம் ஹாஷ்மி ஆகியோர் கண்டித்துள்ளனர்.
மஃதனிக்கு இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களையும் மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்க்கின்றனர். ஆனால்,இவ்வளவு எதிர்ப்பு குரல்கள் எழுந்த பிறகும் ஹிந்துத்துவா பாசிஸ்டுகளும், மதசார்பற்ற வேடம் போடுவோரும் தங்களது அட்டூழியத்தை தொடரத்தான் செய்கின்றார்கள்.
இந்திய சட்டத்தில் காணக்கிடக்கும் சில ஓட்டைகளை பயன்படுத்தி இவர்கள் இத்தகைய அராஜகங்களை புரிந்து வருகின்றனர். ஊழலுக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்திய மத்திய தரவர்க்கத்திற்கு இதுப்பற்றியெல்லாம் கவலை இல்லை! அதிகார மமதையில் ஆட்டம் போடும் இவர்களின் கொட்டத்தை அடக்க மக்கள் சக்தி கிளர்ந்தெழ வேண்டும்! இல்லையேல் இந்தியாவை ஜனநாயக நாடு என பெருமை பேசுவது வெற்று தத்துவமாகவே மாறும்!
அ.செய்யது அலீ.
நன்றி: தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக