சனி, டிசம்பர் 31, 2011

2011ல் திஹாருக்கு தினுசு தினுசாக 'விசிட்' அடித்த விஐபி கைதிகள்!

உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும், அதுபோல தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் என்பார்கள். பத்துரூபாய் திருடியவன் மாட்டிக்கொண்டு அடிபட்டு, சிறைக்கு செல்வதுதான் வாடிக்கையாக இருக்கிறது. ஆனால் கோடி கோடியாக கொள்ளை அடித்தவர்கள், ஜாலியாக ஊர்வலம் வருகின்றனர். இது சட்டம், நீதித்துறையின் மீது சாதாரண மக்களுக்கு ஒரு
நம்பகத்தன்மையை ஏற்படுத்தியது. 

ஆனால் 2011 ம் ஆண்டு அப்படியல்ல நீதித்துறையின் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திய வருடம் என்று கூறும் அளவிற்கு ஊழல்வாதிகள் பலரும் திகார் சிறையை சுற்றிப் பார்க்க போனார்கள், பலர் இன்னும் உள்ளேயே சுற்றிக் கொண்டுள்ளனர்.

இதில் என்ன விசேஷம் என்றால் ஊழலுக்காக அத்தனை அரசியல் கைதிகளும் உள்ளே போன அதேநேரத்தில் ஊழலை எதிர்த்துப் போராடிய அன்னா ஹசாரேவையும் இதை சிறையில் அடைத்து வேடிக்கை பார்த்து மக்களிடைய் வெறுப்பை சம்பாதித்தது மத்திய அரசு.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்

இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று வர்ணிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் சிறை சென்ற வருடம் இது. முன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தனது பதவிக் காலத்தில் 2ஜி உரிமத்தை விதிமுறைகளை மீறி அடிமாட்டு விலைக்கு வழங்கினார், இதனால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியது சிஏஜி எனப்படும் மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம்.

மத்தியில் ஆளும் அரசு தனக்கும், இந்த ஊழலுக்கும் தொடர்பில்லை என்பதைப்போல காட்டிக்கொண்டு, கூட்டணியில் இருந்தவர்களை நைசாக சிறைக்கு அனுப்பியது. அதில் பிப்ரவரி மாதம் 2 ம் தேதி சிறைக்குப் போனவர் ஊழலின் காரணகர்த்தாவான ஆ. ராசா. அவரோடு அந்த ஊழலுக்கு துணையாய் இருந்த தொலைத்தொடர்புத்துறையின் முன்னாள் செயலாளர் பெகுரா மற்றும் ஆ.ராசாவின் தனிச் செயலராக இருந்த சந்தாலியாவையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்து திகார் சிறைக்கு அனுப்பிவைத்தனர்.

'கூடுச்சதியாளர்' கனிமொழி

2ஜி ஊழல் வழக்கில் கைதான மற்றொரு முக்கிய நபர் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி. இவருடைய பெயரை கூட்டுச்சதியாளராக சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் சேர்த்துள்ளது. முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமாக சினியுக் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் பெற்றார் என்பது அவர் மீதான புகாராகும். இதற்காக கடந்த மே மாதம் 20 ம் தேதி சிறைக்கு சென்றார். 6 மாதம் சிறைவாசத்திற்குப் பின்னர் கடந்த டிசம்பர் 3 ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

'காமன்வெல்த்' கல்மாடி

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஒருங்கிணைப்புக்குழு முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி, ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றத்துக்காக கடந்த ஏப்ரல் 25 ம் தேதி சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் காமன் வெல்த் விளையாட்டு போட்டி நடந்தது. போட்டி அமைப்பு குழு தலைவராக ஒலிம்பிக் இந்திய சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி நியமிக்கப்பட்டு இருந்தார். போட்டிக்கான ஏற்பாடு களை செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும் ரூ.8 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியானதை அடுத்து சுரேஸ் கல்மாடியை சிபிஐ அதிகரிகள் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். 

கர்நாடகவை புரட்டிப்போட்ட சுரங்க ஊழல்

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் ரெட்டி சகோதரர்களால் நடத்தப்பட்ட சட்ட விரோத சுரங்கத் தொழிலால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 16,000 கோடி அள வுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள் ளதாக கர்நாடக லோக் ஆயுக்தா அறிக்கை தெரிவித்தது. 

சுரங்க முறைகேடுகள் தொடர்பாக ஜனார்தன் ரெட்டி மற்றும் ஓபுலாபுரம் சுரங்க நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய சிபிஐ, அவர்களை செப்டம்பர் 5ம் தேதி கைது செய்து ஹைதராபாத் சிறையில் அடைத்தது.

இந்த ஊழலில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் சிக்கினார். அவரது குடும்பமே சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக லோக் ஆயுக்தா குற்றம் சாட்டியது. கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பிய இந்த ஊழல் புகாரில் சிக்கிய எடியூரப்பா பெரும் போராட்டத்திற்குப் பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

பின்னர் கர்நாடகாவில் முதல்வராக இருந்தபோது எடியூரப்பா தனது உறவினர்களுக்கு முறைகேடாக நிலங்களை ஒதுக்கீடு செய்தாக வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து பெரும் போராட்டத்திற்கு பின்னர் அக்டோபர் 15 ம் தேதி அவரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவர் சிறைக்குப் போகாமலேயே மருத்துவமனையில் டேக்கா அடித்து அதற்கு எதிர்ப்புக் கிளம்பியதால் பின்னர் சிறைக்குத் திரும்பி தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்த அமர்சிங்

எம்.பிக்களுக்கு ஓட்டளிக்க பணம் கொடுத்த வழக்கில் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்.பியுமான அமர்சிங் செப்டம்பர் 6 ம் தேதி கைது செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் கடந்த 2008 ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது அரசு ஆதரவாக வாக்களிக்க கோரி பாஜக எம்.பிக்கள் மூன்று பேருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றாச்சாட்டு எழுந்தது. இதற்கு காரணகர்த்தா அமர்சிங்தான் என்று எழுந்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டு அவரும் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

அன்னா ஹசாரே கைது 

இந்தியாவில் மட்டும் தான் இதுபோன்ற விநோதங்கள் நிகழ்ந்தேறும். ஊழல்வாதிகள் கைது செய்யப்பட்ட அதே நேரத்தில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவும் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் 16 ம் தேதி வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்ட அன்னா ஹசாரேவை போலீசார் கைது செய்தனர். அவரையும் திகார் சிறையில் அடைத்து அழகு பார்த்தது காங்கிரஸ் அரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக