வெள்ளி, டிசம்பர் 30, 2011

தரம் கெட்ட தினமலரின் தரம் கெட்ட செய்தி !


"என்னாலே முடியல்லே...!!!இது தினமலர் தப்பா?? இல்லை அதன் வாசகர்கள் தரத்தை தினமலர் இந்த கீழ்நிலையில் வைத்திருக்க விரும்புகிறதா? இல்லை நமது தமிழக அரசின் முக்கிய அலுவல்கள் இந்த தரத்தில் தான் இருக்கின்றதா??
இதை எல்லாம் நம்பும் முட்டாள்கள் நாட்டில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்...!!! இப்படி சொன்னதற்கே ஆயிரம் வியாக்கியானம் சொல்ல "மேதாவிகள்" வரிசையில் நிற்பார்கள்...!!! ரொம்ப கஷ்டம் தான்...!!!"


இப்படி அங்கலாய்த்திருப்பவர்: Madurai virumaandi - San Jose, CA,யூ.எஸ்.ஏ. அங்கலாய்ப்பைக் கொட்டியுள்ள இடம்: தினமலர் செய்தியின் வாசகர் கருத்துப்பகுதி

தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் அரசியல்வட்டாரங்களில் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திய திருமதி. சசிகலா அவர்களின் போயஸ் கார்டன் இடம்பெயர்வு நிகழ்வை பத்திரிக்கைகள் தங்கள் கற்பனைகளுக்கு ஏற்ப செய்தியாக்குகிறார்கள். நக்கீரன் ,ஜு.வி போன்றவர்கள் புலனாய்வு என்ற பெயரில் இப்படியாக கதையளந்து செய்தி வெளியிடுகிறார்கள் என்றால் சந்தடிசாக்கில் தினமலர் புகுந்து விளையாடியுள்ளது.

சசி-ஜெயலலிதா உடன்பிறவா சகோதரிகளின் உடன்பிரிவுக்குக் காரணம் மனநலம் பாதிக்கப்பட்ட மன்னார்குடி நிர்வாண சாமியாரின் சாபம் என்று தினமலர் "எக்ஸ்குளூசிவ்" செய்தி வெளியிட்டுள்ளது. இதற்குத்தான் ஒரு வாசகர் மேற்படியான கருத்தை பதிவு செய்துள்ளார். தினமலருக்கு மதவெறி எந்தளவுக்கு அதிகமோ அதேபோல் சாதிவெறியும் குறைந்ததல்ல! என்பதற்கு இந்தச்செய்தியே நல்ல உதாரணம்.

சாமியார்கள் தவமிருக்கும்போது இடையூறு செய்தால் அவர்கள் சாபமிட்டால் பலிக்கும் என்பது பகுத்தறிவற்ற அப்பாவி பக்தர்களின் நம்பிக்கை. அதுவும் புராணகால சாமியார்களின் சாபங்களுக்கு மட்டுமே இத்தகைய சக்தி இருப்பதாக வேதாந்திகள் கதைபரப்பி வந்தனர். உண்மையிலேயே சாமியார்களின் சாபத்திற்கு சக்தியிருந்தால் காஞ்சிபுரம் சங்கரராமன் கொலைவழக்கில் தொடர்புடைய சங்கராச்சாரியாரை நீதிமன்ற படியேறவிட்டு அவரது இமேஜ் தகர்ந்தபோதே பலித்திருக்க வேண்டும். இல்லையெனில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா எடுத்த சட்டநடவடிக்கைகளை சங்கராச்சாரியார்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்று அவருக்கு எதிராக சாபமிடாமல் இருந்திருக்க வேண்டும்!

நான் சொல்லவருவது என்னவென்றால், ஒருபக்கம் பக்திமலர் என்ற பெயரால் மூடநம்பிக்கைகளைப் பரப்பிவரும் தினமலர், இன்னொரு பக்கம் ஆன்மீகப் போர்வையில் மக்களை மடையர்களாக்கிவரும் சாமியார்கள்! இவர்களின் மூடநம்பிக்கைகளைத் தோலுரிக்க வேண்டும். கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள சங்கராச்சாரியாருக்கு ஆதரவான கருத்துருவாக்கங்கள் செய்துகொண்டு, நிர்வாண சாமியார் குறித்த செய்தியைப்பரப்பி வாசகர்களையும் அப்பாவி இந்துமத பக்தர்களையும் தினமலர் குழப்புவது கண்டிக்கத்தக்கது.

அந்த நிர்வாண சாமியாரின் சாபத்திற்கு உண்மையிலேயே சக்தி உள்ளதாக தினமலர் கருதுமென்றால், பெரியார் பாசறையில் பயின்ற பகுத்தறிவாளன் என்ற முறையில் தினமலருக்குச் சவால் விடுகிறேன்: "இலங்கையில் தமிழர்களைக் கொன்றுகுவித்த ராஜபக்சே, தமிழகத்திற்குத் தண்ணீர்தர மறுக்கும் கர்நாடக, கேரள அரசியல்வாதிகள், கூடங்குளம் அணு உலையை வைத்தே தீருவோம் என்று கொலைவெறியுடன் செயல்படும் மத்திய அரசு, மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோருக்கு எதிராக எந்த நிர்வாணச் சாமியாரையாவது சாபமிட வைக்க தினமலர் தயாரா?."

அவ்வாறு சாபமிட்டு, ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்சே உடன் அழிந்துவிட்டாலோ அல்லது கேரள அரசியல்வாதிகள் தொத்து நோய் வந்து படுக்கையில் விழுந்துவிட்டாலோ... இப்படி இன்னபிற சாபங்களில் ஏதாவது ஒன்று நடந்துவிட்டால், தினமலரை என் ஆஸ்தான குருவாக ஏற்று அதன் மூடநம்பிக்கை பிரச்சாரத்தை இங்கே அமெரிக்காவிலும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.
- வல்லம் அன்புச்செல்வன்- CA, USA.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக