புதன், டிசம்பர் 28, 2011

காணாமல்போன தேசபக்தர்கள்!


முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இன்னும் யார்யாரின் தலைகள் எல்லாம் உருளப்போகுதோ தெரியவில்லை! இனவெறி, மொழிவெறி, மதவெறி, பிராந்தியவெறி இன்னும் என்னென்ன வெறிகளெல்லாம் உண்டோ கிட்டத்தட்ட அத்தனையையும் பிரயோகித்தாகி விட்டது. கேரள அரசியல்வாதிகள் கொளுத்திய தீயில் கட்சிகள் பாகுபாடின்றி அனைத்து
அரசியல்வாதிகளும் குளிர்காய்ந்து விட்டார்கள். சட்டமன்ற தேர்தலில் கழுத்தறுபட்ட வைகோ முதல் மூக்கறுபட்ட ராமதாஸ்வரை தமிழர்களை உசுப்பேற்றி நாம் தமிழர் என்று நிருப்பித்து விட்டோம்.

டெல்லியில் நடந்த திரைப்பட விழாவில் கடந்த வருடம் ஆஸ்கர் விருது பெற்றதற்காக சிலாகித்துப்பேசப்பட்ட A.R.ரஹ்மானிடம், "முல்லைப் பெரியாறு பிரச்சினையை ஊதிப்பெரிதாக்கிய DAM-999 திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா?" என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்கப்போக, "இருபிரிவுகளில் விருதுக்கு சமர்ப்பித்துள்ளனர். ஏதேனும் ஒன்றிலாவது விருது கிடைத்தால் 'இந்தியன்' என்ற வகையில் சந்தோஷப்படுவேன்" என்று அவர் பதிலளித்து இருந்ததாக NDTV இல் காட்டினார்கள்.

அவ்வளதுதான்! "ஒட்டுமொத்த தமிழர்களும் வெறுக்கும் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று A.R.ரஹ்மான் விருப்பம்!" என்று நக்கீரன் கொளுத்திப்போட, தமிழுணர்வு பீறிட்டுக்கிளம்பிய சிலர் A.R.ரஹ்மான் வீட்டருகே ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள். இந்தச் செய்தி வெளியான இணைய தளங்களில் வாசகர் பின்னூட்டம் என்ற பெயரில் சிலர் சாமியாடிச் சென்றிருந்தனர். அதாவது A.R.ரஹ்மான் மலையாள படத்திற்கு விருது கிடைக்க வேண்டும் என்று விரும்பியதால் அவர் தமிழின துரோகியாம்! இத்தனைக்கும் அவர் இந்தியன் என்ற முறையில் தான் மகிழ்ச்சியடைவேன் என்றுதான் பேசியுள்ளதாக விளக்கம் கொடுத்துள்ளார்.

விளக்கமாவது மண்ணாங்கட்டியாவது! சொன்னது யார்? இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக விரும்பி ஏற்று, சராசரி முஸ்லிமாக தன்னை காட்டிக்கொள்ளும் ஒருவர் சொல்லியுள்ளார். ஆஸ்கர் விருது பெற்றபோது "எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே" என்று சொன்ன இஸ்லாமிய அடிப்படைவாதி! மாநிலமே பற்றியெரியும் ஓர் பிரச்சினையில், கேரளாவுக்கு ஆதரவாக எப்படி கருத்து சொல்லலாம்? என்ற வசவுகள்!

இதேபோல், கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்பு போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும்போது மத்திய அரசின் நல்லெண்ண தூதுவராக முன்னாள் ஜனாதிபதியும் இந்தியாவின் அணுசக்தி தொழில்நுட்பத்தின் தந்தை என்றும் போற்றப்படும் A.P.J அப்துல்கலாம் அவர்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்து சொன்னதற்கும் அவரின் மதம், இனம் எல்லாம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விமர்சிக்கப்பட்டது.

அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக பதவியிலிருந்தபோது அவருடைய சில நடவடிக்கைகள் இந்துமத சார்பு கொண்டதாக இருந்தன. அதுகுறித்து முஸ்லிம்கள் கொஞ்சம் அதிருப்தி தெரிவித்தபோதெல்லாம் அப்துல்கலாமை, மதத்திற்குள் அடக்காமல் அவரது செயல்களை மதம்கடந்து பரந்த மனப்பான்மையுடன் அணுகுங்கள் என்று கீதா உபதேசம் செய்தனர். அதுபோல், இசையை இஸ்லாம் வெறுப்பதால் முஸ்லிமாக இருக்கும் A.R.ரஹ்மான் அதை தவிர்த்துக் கொண்டால் நல்லது என்று சொல்லப்பட்டபோது, இசைக்கு மதமில்லை என்றும் இசையும் ஓர் தெய்வீக சக்திதான் என்றும் வியாக்கியானம் பேசப்பட்டது!

முல்லைப் பெரியாறு விசயத்திலும், கூடங்குளம் விசயத்திலும் A.P.J அப்துல் கலாமையும் A.R.ரஹ்மானையும் மத, இன, மொழி கண்ணோட்டத்தில் சுருக்கியவர்களை, "ஐயா! இவர்கள் வல்லரசு இந்தியாவின் வருங்கால முகவரிகள்! தயவு செய்து மத, இன, மொழி குப்பைகளை இவர்கள்மீது வீசாதீர்கள்" என்று "அக்மார்க் தேச பக்தர்கள்" எவரும் சொல்லாதது ஆச்சரியம்தான் போங்க!
- அதிரைக்காரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக