செவ்வாய், டிசம்பர் 27, 2011

2012 லும் தங்கத்தின் பளபளப்பு தொடருமா - சிறப்பு அலசல்


றங்கவே இறங்காதா என்று அனைவரும் ஏங்கிய தங்கத்தின் விலை கடந்த இரண்டு மாதங்களாக ஏறியும் இறங்கியும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி கொண்டிருக்கிறது. இச்சூழலில் 2012லும் தங்கத்தின் பளபளப்பு தொடருமா? முதலீட்டு நோக்கத்திற்காக தங்கம் வாங்கலாமா என்பதை பற்றிய சிறு அலசலை இந்நேரம் வாசகர்களுக்கென பிரத்யேகமாக தருகிறோம்.
2011 ஆம் ஆண்டை பொறுத்த வரை தங்கம் மிகப் பெரும் உச்சத்தை தொட்டது. தங்கத்தை
முதலீட்டு நோக்கில் வாங்கியவர்களுக்கு மிகப் பெரும் லாபம் தந்தது. 2011 ம் ஆண்டு தங்க ஆண்டு என்றே சொல்லும் அளவுக்கு தங்கம் 33 % லாபம் தந்துள்ளது. தற்போது பிரபலமாகி வரும் வெள்ளியும் 11 % லாபம் தந்துள்ள நிலையில் பங்கு சந்தையோ 25 % நஷ்டத்தை தந்துள்ளது.

புரியும் படி சொல்ல வேண்டுமென்றால் ஒருவர் ஜனவரி 1, 2011 அன்று 1 இலட்சம் ரூபாயை தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் டிசம்பர் 26,2011 அன்று அவருக்கு 1,33,000 ரூபாயும் வெள்ளியில் முதலீடு செய்திருந்தால் 1,11,000 ரூபாயும் பங்கு சந்தையில் (சென்செக்ஸ்) முதலீடு செய்திருந்தால் 75,000 ரூபாயும் கிடைத்திருக்கும்.

அதிகபட்சமாக செப்டம்பரில் 3,533 ரூபாய்க்கு விற்ற 1 கிராம் தங்கம் (24 கேரட்) தற்போது 2,950 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 2012 ல் இது அதிகரிக்கும் என்று சில நிபுணர்களும் சிலர் இது வீழ்ச்சியடையும் என்றும் கருதுகின்றனர்.

வீழ்ச்சியடையும் என்று சொல்லும் நிபுணர்கள் அமெரிக்க பொருளாதாரத்தின் மூன்றாம் காலாண்டு அறிக்கை நம்பிக்கையளிப்பதாக இருப்பதால் டாலர் பலப்படுவதாலும் பணவீக்கம் குறையும் வாய்ப்புள்ளதாலும் தங்கத்தின் விலை ஒரு கிராம் 2695 ரூபாய் வரை குறையும் என்று சொல்கிறார்கள்.

ஆனால் மற்றொரு தரப்பினரோ இவ்வாண்டு தங்கத்தின் விலையை உயர்த்திய காரணிகளான ஐரோப்பிய கடன் பிரச்னை, எதிர்மறை வட்டி விகிதங்கள், பணவீக்கம் போன்றவை 2012லும் ஆதிக்கம் செலுத்தும் என்றும் நிச்சயமாக ஒரு கிராம் தங்கத்தின் விலை 3350 ரூபாயிலிருந்து 3800 வரை உயரும் என்று சொல்கின்றனர்.

கருத்துகள் இரண்டு மாதிரியாக இருந்தாலும் இந்தியாவை பொறுத்த வரை இந்திய ரூபாயின் வீழ்ச்சியின் காரணத்தால் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் கடந்த மாதத்தில் 7% வீழ்ந்தாலும் இந்தியாவிலோ வெறும் 2% சதவிகிதம் வீழ்ந்ததையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். மேலும் இந்தியாவை பொருத்த வரை பண்டிகை மற்றும் திருமண காலங்களின் போது நகைகளின் தேவை அதிகமாகுவதால் தங்கத்தின் விலை உயரவும் பிற காலங்களில் குறையவும் சாத்தியமுள்ளது.

அனைத்து கருத்துகளையும் அலசி ஆராய்ந்ததில் நாம் என்ன முடிவுக்கு வரலாம் எனில் 2012லும் தங்கத்தின் பளபளப்பு தொடரும் எனினும் 2011ல் 32 % லாபம் கொடுத்த மாதிரி இல்லாமல் 12% முதல் 20% வரை லாபம் கொடுக்கலாம். குறிப்பாக வரும் மார்ச் 2012 வரை தங்கத்தின் விலை ஒரு கிராம் (24 கேரட்) 2650 வரை குறைந்தாலும் பிறகு 3500 வரை உயரும் வாய்ப்புள்ளதாகவே நாம் கருதுகிறோம். ஒரு ஆண்டு பொறுத்து தான் பார்ப்போமே நம் கணிப்பு என்ன ஆகிறது என்று? சரி தானே வாசகர்களே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக