மதுரை மேலமாரட் வீதியில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் தரை தளத்தில் சுமார் 2 ஆயிரம் சதுரஅடி பரப்பில் உள்ள கட்டிடத்தில் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் எம்.பி. அலுவலகம் கடந்த 2009ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. மேயராக ராஜன்செல்லப்பா பதவி யேற்றார். கடந்த மாதம் கூடிய மதுரை மாநகாரட்சி அவசரக்கூட்டத்தில் மு.க.அழகிரியின் எம்.பி. அலுவலகத்தை மாநகராட்சி இடத்தில் இருந்து அகற்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் மதுரை மாநகராட்சி தற்போது 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாலும், மதுரை தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில் செயல்படாமல் இருக்கும் மதுரை எம்.பி.யின் அலுவலகத்தை தெற்கு மண்டல அலுவலக உபயோகத்துக்கு பயன்படுத்தி கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அங்குள்ள எம்.பி. அலுவலகத்தை உடனடியாக திரும்ப பெறவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் மு.க. அழகிரி தனது எம்.பி. அலுவலகத்தை உடனடியாக காலி செய்யும்படி மதுரை மாநகராட்சி நேற்று முன் தினம் நோட்டீசு அனுப்பியது.
அந்த நோட்டீசில் தெற்கு மண்டல அலுவலக பயன்பாட்டுக்கு தேவைப்படுவதால் செயல்படாமல் இருக்கும் எம்.பி. அலுவலகத்தை உடனடியாக மாநகராட்சியிடம் ஒப்படைக்கும்படி கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து மத்திய மந்திரி மு.க.அழகிரியின் எம்.பி. அலுவலகம் நேற்று காலி செய்யப்பட்டது. அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் தி.மு.க. நிர்வாகிகள் எடுத்து சென்றனர். பின்னர் அந்த அலுவலக அறை சாவி மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக மாநகராட்சி கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக