வெள்ளி, டிசம்பர் 23, 2011

முல்லைபெரியாறு பிரச்சனை! வாகன பேரணி சென்ற ம.ம.க.வினர் 400 பேர் கைது



கோவை: முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசைக் கண்டித்து கேரளாவுக்கு வாகன ஊர்வலம் செல்ல முயன்ற மனிதநேய மக்கள் கட்சியினர் 400 பேரை காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையிடக் கோரியும், மனிதநேய மக்கள் சார்பில் வாகன ஊர்வலம் மற்றும் தர்ணா போராட்டம் நடத்த
முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து உக்கடம், ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று தமிழக எல்லையான கந்தேகவுண்டன் சாவடியில் தர்ணா நடத்த திட்டமிட்டிருந்தனர். இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் எஸ்.ஹைதர் அலி, மாநிலச் செயலர் இ.உமர், துணைச் செயலர்கள் கோவை சையது, ஏ.சாதிக் அலி, கோவை மாவட்ட நிர்வாகிகள் பர்கத் அலி, சாகுல் அமீது, எம்.எச்.அப்பாஸ் உள்பட நூற்றுக் கணக்கானோர் ஆத்துப்பாலம் பகுதியில் கூடினர்.

மாநகரக் காவல் துணை ஆணையர்கள் ஹேமா கருணாகரன், செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் வாகனப் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். ஆத்துப்பாலம் அருகே பாலக்காடு பிரதான சாலையில் தடுப்புகளைக் குறுக்கே வைத்து காவல்துறையினர் அரண் அமைத்திருந்தனர்; ஏராளமான காவலர்களும் அங்கே குவிக்கப்பட்டிருந்தனர்.

காவல்துறையினரின் தடையை மீறி பேரணிக்கு முயன்றபோது, மனிதநேய மக்கள் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இப் போராட்டம் காரணமாக ஆத்துப்பாலம் பகுதியில் ஒரு மணிநேரத்துக்கு மேலாக பரபரப்பு நிலவியது. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்து.
தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாக, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலர் ஹைதர் அலி தலைமையில் 400 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலர் ஹைதர் அலி கூறியது:

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை கேரள அரசு உதாசீனப்படுத்தி வருகிறது. இரு மாநில மக்களின் நல்லுறவைப் பாதிக்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இப் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக