புதன், டிசம்பர் 28, 2011

சென்னையிலிருந்து 600 கி.மீ தூரத்தில் தானே புயல்: தமிழக கடலோரப் பகுதிகள் உஷார் நிலை


சென்னையிலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் தானே புயல் நிலைகொண்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனால் தமிழக கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் ரமணன் தெரிவிக்கையில்.
சென்னையில் இருந்து கிழக்கு, தென்கிழக்கே 600 கி.மீ. தொலைவிலும், இலங்கை திரிகோண மலையில் இருந்து வடகிழக்கே 650 கி.மீ. தெலைவிலும், அந்தமானில் இருந்து வட மேற்கே 700 கி.மீ. தொலைவிலும் "தானே' புயல் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும். இதனால் வட தமிழகம், தென் ஆந்திர கடற்கரை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். தானே புயல் கடலூர் - நெல்லூருக்கு இடையே வெள்ளிக்கிழமை (டிசம்பர் 30) காலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசக்கூடும். இதனையொட்டி வட தமிழகம், புதுவை மற்றும் தென் ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் பலத்த மழை பெய்யக் கூடும். தமிழகம் மற்றும் புதுவை கடற்கரைப் பகுதிகளில் புதன்கிழமை மணிக்கு 50 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக