வியாழன், டிசம்பர் 22, 2011

முல்லைப் பெரியாறு: பிரச்சனையும் பத்திரிக்கைகளும்

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் அடிப்படை ஆதாரமற்ற பொய்யைக் கூறி கேரள அரசும், அரசியல்வாதிகளும் கொளுத்தி ஊதிவிட்டத் தீ இன்று காட்டுத் தீயாய் இரு மாநிலங்களுக்கு இடையே கொழுந்துவிட்டு எரிகிறது. 
‘முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது, அது எப்போது வேண்டுமானாலும் இடிந்து, அதனால் கேரளத்தின் 5

மாவட்டங்களில் பெரும் உயரிழப்பு ஏற்படும’ என்று ஒரு பொய்யைக் கூறி, கேரள ஊடகங்களின் துணையுடன் அந்த பொய்யைப் பெரிதாக்கி இரு மாநிலங்களுக்கு இடையே பெரிய பிரச்சனையை உண்டாக்க முடியும் என்பதை சாதித்துக்காட்டிய கேரள அரசும், அரசியல்வாதிகளும் தாங்கள் வைத்தத் தீ இன்று கொழுந்துவிட்டு எரிவதில் குளிர் காய முடியாமல் வெந்து நொந்துபோய் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களின் பொய்யும் போராட்டமும் கேரளத்திற்கு எந்த பொருளும் தமிழ்நாட்டில் இருந்து போய் சேர முடியாத நிலையை உருவாக்கிவிட்டனர். இரு மாநிலங்களுக்கும் இடையே உருவாகியுள்ள இந்தப் பதற்றைத் தணிக்க வேண்டியதில் நாளிதழ்களுக்கும், இதழாளர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் நீதிமன்றத்திலும், வெளியிலும் முன்வைக்கப்பட்ட எந்த ஆதாரத்தையும் பொருட்படுத்தாமல், கேரள அரசியல்வாதிகளின் குரலாக சில ஆங்கில நாளிதழ்கள் செயல்பட்டுவருவதுதான் வேதனையான விடயமாகும். உள்ளூர் பிரச்சனையில் இருந்து உலகப் பிரச்சனை வரை நிபுணர்களையும், இராஜ தந்திரிகளையும் எழுத வைத்து அறிவு மேதாவிலாசத்தை அன்றாடம் வெளிப்படுத்தும் ஆங்கில நாளிதழ்கள் சில, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையின் உண்மைத் தன்மையைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் கேரள அரசியல்வாதிகளின் குரலாய் செய்திகளை வெளியிட்டும், எழுதியும் வருகின்றன.

இதில் ஒரு நாளிதழ், மகிந்த ராஜபக்சவின் ராஜ விசுவாசி. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போர் நடக்கும் போது எப்படி உறுதியாக நின்று உண்மையை மறைத்து, சிறிலங்க அரசு பேச்சாளர் கூறியதை மட்டுமே செய்தியாக்கி தனது ஈடிணையற்ற ராஜபக்ச விசுவாசத்தைக் கட்டிக்காத்ததோ, அதேபோல் இப்போதும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் தமிழின பகைமையை எப்படியெல்லாம் காட்ட முடியுமோ அப்படியெல்லாம் வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறது.

இந்த தேசிய நாளிதழ் முல்லைப் பெரியாறு அணை என்று எழுதுவதில்லை, அதனை கேரள அரசியல்வாதிகள் எப்படி உச்சரிப்பார்களோ அதேபோல் “முல்ல பெரியார்” என்றே எழுதி வருகிறது. தேனி, கம்பம் பகுதி மக்கள் முல்லையாறு அணை என்றோ அல்லது முல்லைப் பெரியாறு அணை என்றோதான் அழைப்பர். ஏனெனில் ஒன்று முல்லையாறு, மற்றொன்று பெரியாறு. இவை இரண்டும் வந்து சேரும் இடத்தில் (Head Waters) கட்டப்பட்ட அணையாதலால் அதனை முல்லைப் பெரியாறு அணை என்றே குறிப்பிடுகிறார்கள். ஆனால் இவவிரு ஆறுகளுக்கும் ஏதோ மலையாளத்தில் பெயர் இருப்பதுபோல் அதனை முல்லா பெரியார் என்று எழுதி, தங்களின் கேரள விசுவாசத்தை காட்டி வருகின்றன. 

இவ்விரு நதிகளுக்கும் மலையாளத்தில்தான் பெயர் இருந்திருக்கும் என்றால், அது முல்லையாறு என்பது முல்லைப் புழா என்றும், பெரியாறு என்பது பெரிய புழா என்றும்தான் இருந்திருக்கும் என்பது கேரளத்திற்குப் பயணம் செய்து அலுத்தவர்களுக்குத் தெரியும். ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும் ஒரு வரலாறு உள்ளது என்பதை அறியாமலோ அல்லது அறிந்தும் வேண்டுமென்றோ இப்படி முல்லா பெரியார் என்று எழுதுகிறார்கள் என்றால், இது தமிழினப் பகை உணர்வு என்பதைத் தவிர வேறு என்ன? 

இதேபோல் மும்பையை மையமாகக் கொண்டு இந்திய அளவில் நாளிதழ் நடத்தும், சென்னையில் ரூ.1க்கு பத்திரிக்கை விற்கத் தொடங்கிய ஆங்கில செய்தித்தாளும் முல்ல பெரியார் என்றே தொடர்ந்து எழுதி வருகிறது. இப்படியெல்லாம் வேண்டுமென்றே இவர்கள் திருத்தி எழுதுவதன் பின்னணி யாரும் அறியாத இரகசிமல்ல. அதனைத்தான் ஒரு இணைய இதழ் “முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையும், மலையாளத் தொடர்பும்” என்று எழுதி, பின்னணியில் இருந்து எழுதும் முகங்களை வெட்ட வெளிச்சமாக்கியது. அந்த கட்டுரைக்கு தார்மீக ரீதியில் பதலளிக்காமல் நூறு கோடி ரூபாய் நட்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்வோம் என்று இந்த ஆங்கில நாளிதழ் மிரட்டல் விடுத்துள்ளது. 

பெயரோடு இவர்களின் பித்தலாட்டம் முடிந்துவிடவில்லை. இப்பிரச்சனையில் கேரளத்திற்குச் சாதகமாக எழுதும் ‘நிபுணர’களை பேட்டி கண்டு வெளியிடுகிறார்கள். முல்லைப் பெரியாறு அணையை தமிழ்நாடு மறந்துவிட வேண்டும் என்று எழுதிகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இடுக்கி மாவட்டத்தை கேரளம் மறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாட்டில் குரல் எழக்காரணமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக