கடந்த புதன்கிழமை (28.12.2011) பலஸ்தீன் விடுதலை அமைப்பான பீ.எல்.ஓ. வெளியிட்டுள்ள அறிக்கையில், 2011 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் 21 சிறுவர்கள் உட்பட 180 பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு, சுமார் 3300 பேர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இதே வருடத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையினால் ஆக்கிரமிக்கப்பட்ட
பலஸ்தீன் நிலத்தில், குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 26837 சட்டவிரோத குடியேற்ற வதிவிடங்கள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன என்றும் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.2011 ஆண்டில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை 15525 தூனம் (1 தூனம் = 1000 சதுர கி.மீ.) பலஸ்தீன் நிலப்பரப்பை அபகரித்துள்ளதோடு, அதிலிருந்த 18764 மரங்களை அழித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் நிலத்தில் சட்டவிரோதக் குடியேற்றங்களை அதிகளவில் நிறுவிவரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையின் கட்டளையின் பேரில் 495 பலஸ்தீன் வீடுகள் இவ்வாண்டில் இடித்துத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
இதற்கிடையில், இவ்வாண்டு முழுவதும் இஸ்ரேலின் சட்டவிரோத யூதக் குடியேற்றவாசிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கணக்கிலடங்காதென்றும், புனித கிறிஸ்து பிறந்த நத்தார் பண்டிகை சமயத்தில்கூட இக்குடியேற்றவாசிகள் தம்முடைய அடாவடித்தனங்களை நிறுத்தவில்லை என்றும், ஜோர்தான் ஆற்றுக்கருகே அமைந்திருந்த ஆர்தடொக்ஸ் சர்ச் மற்றும் தேவாலயங்கள் மீதான காட்டுமிராண்டித் தாக்குதல்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பண்பாடற்ற செயற்பாடுகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளன எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
=
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக