புதன், டிசம்பர் 28, 2011

ஆப்ரிக்காவை நோக்கி அல் காய்தா : அமெரிக்க-இங்கிலாந்து ராணுவத்தின் அடுத்த இலக்கு ஆப்ரிக்கா?


பாகிஸ்தானிலிருந்து அல்காய்தா அமைப்பைச் சார்ந்த பல முக்கியத் தலைவர்கள் வட ஆப்ரிக்க நாடுகளுக்கு சென்று விட்டதாக இங்கிலாந்து உளவுப்பிரிவு அறிவித்துள்ளது.
இவ்வாறு ஆப்கானிஸ்தானிலிருந்தும் அல்காய்தா அமைப்பினர் லிபியா போன்ற வட ஆப்ரிக்க நாடுகளுக்கு செல்வதாக தெரிகிறது. கடந்த மே மாதம் ஒஸாமா பின் லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிறகு அமெரிக்கா ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி பல தாக்குதல்களை பாகிஸ்தானிலும்
ஆப்கானிஸ்தானிலும் நடத்தியது. இதனால் அங்கிருந்து வேறு நாடுகளுக்கு செல்ல அல் காய்தா திட்டமிட்டு வட ஆப்ரிக்க நாடுகளைத் தேர்ந்தெடுத்துள்ளது என்று அந்த உளவுப்புரிவு தகவல் கூறுகிறது.

மேலும், இங்கிலாந்து உளவுப்பிரிவு தகவல் தெரிவிக்கையில், தற்போது ஏறத்தாழ 100 அல்காய்தாவினர் மட்டுமே ஆப்கானிஸ்தானில் இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் தாக்குதல்களுக்குத் தலிபான் பொறுப்பேற்றுக் கொண்டதாலும் அல்காய்தா அங்கிருந்து தங்களது படையினை விலக்கிக் கொள்வதாகத் தெரிகிறது. தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் அல்காய்தா வலுவிழந்து விட்டதாக குறிப்பிட்டுள்ள உளவுப்பிரிவு அவர்கள் வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று கூடுவதால் அங்கு ஆபத்து நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்து உளவுப்பிரிவின் இப்புதிய தகவல், அமெரிக்க-இங்கிலாந்து நாட்டினரின் அடுத்த இலக்குகளாக ஆப்ரிக்க நாடுகளைத் தேர்வு செய்துள்ளனவோ என்ற அச்சப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக சமூக-அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக