செவ்வாய், டிசம்பர் 27, 2011

இஸ்ரேலுடன் உடன்படிக்கைகளை மதித்து நடப்போம் - அல் நூர் !


இஸ்ரேலுடன் எகிப்து செய்து கொண்டுள்ள சமாதான உடன்படிக்கையை அல் நூர் கட்சி மதித்து நடக்கும் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் உறுதி அளித்துள்ளார். எகிப்தில் நடைபெற்று வரும் தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக சதவிகித வாக்குகளைப் பெற்று இருப்பது ஸலபி அமைப்பின்
அல்நூர் கட்சியாகும். இந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளரான யுஸ்ரி ஹம்மாத் இஸ்ரேலைச் சார்ந்த ராணுவ வானொலிக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் இஸ்ரேலுடன் எகிப்து செய்து கொண்டுள்ள சமாதான உடன்படிக்கையை அல்நூர் கட்சி மதித்து நடக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கைகளில் ஏதேனும் திருத்தங்கள் செய்யவேண்டும் என விரும்பினால் அதனை கலந்துரையாடல் மூலம் முடிவு செய்து கொள்ளலாம் என யுஸ்ரி ஹம்மாத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அனைவரும் எகிப்தில் வரவேற்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.

ஸலபிக் கட்சியைச் சார்ந்த ஒருவர் இஸ்ரேலிய ராணுவ வானொலிக்கு பேட்டியளித்திருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாக இஸ்ரேலிய அதிகாரி AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பாக அல்நூர் கட்சியின் பிரதிநிதிகள் இஸ்ரேலிய அதிகாரிகளைச் சந்தித்தாக வந்த செய்திகளை அல்நூர் கட்சி மறுத்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக