புதன், டிசம்பர் 28, 2011

ராசாத்தி அம்மாள் திட்டம்: தலையில் கைவைத்த பிரதமர்!

மீண்டும் ஒருமுறை உள்வீட்டுக் கலகத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. கனிமொழியை லைம் லைட்டில் கொண்டுவந்தால், கட்சிமீது ஊழல் இமேஜ் விழும் என்று கோபாலபுரத்திலும், கனிமொழியை
முன்னிலைப்படுத்த வேண்டும் என்று சி.ஐ.டி. காலனியிலும் கொடுத்த அழுத்தங்களில் சிக்கி, திக்குமுக்காடி, கடைசியில் சி.ஐ.டி. காலனி பக்கம் சாய்ந்திருக்கிறார் அவர்.
சமீபத்தில் சென்னைக்கு விஜயம் செய்த பிரதமரைச் சந்திக்க கனிமொழியை அழைத்துச் செல்ல எடுத்த முடிவுதான், வீட்டுக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரதமரைச் சந்தித்த தினத்தன்று காலைவரை கனிமொழியை அழைத்துச் செல்வதா இல்லையா என்று முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார் என்று தி.மு.க. சர்க்கிளில் கூறுகிறார்கள். கனிமொழியை அழைத்துச் செல்வதற்கு கடும் எதிர்ப்பு ஸ்டாலின் தரப்பில் இருந்து வந்ததுதான் அதற்குக் காரணம் என்கிறார்கள் அவர்கள்.
பிரதமர் வருவதற்கு முதல் நாளே இந்த இழுபறி தொடங்கிவிட்டது.
கடந்த ஒரு வாரமாகவே முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக மற்றைய கட்சிகள் எல்லாம் தினம் ஒரு கருத்து, அறிக்கை என்று தூள் கிளப்பிக் கொண்டிருக்க, தி.மு.க. அடக்கி வாசிக்கும்படி நிலைமை ஆயிற்றே என்று கலைஞரும் கட்சியின் சீனியர்களிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். “மத்திய அரசிலும் நாம் இருக்கிறோம். டில்லிக்காரங்களை பகைக்க முடியாதபடி கனிமொழி வழக்கும் இருக்கிறது. கைகளைக் கட்டிவிட்டு போராட வேண்டியிருக்கு” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அப்படியான சூழ்நிலையில்தான் பிரதமரின் தமிழக ட்ரிப் உறுதியானது.
“பிரதமர் தமிழகம் வருகிறார் என்றால், ஏதோ ஒரு வகையில் தமிழகத்துக்கு ஆதரவான நடவடிக்கை ஒன்றையாவது எடுப்பார். அது நாம் சொல்லி எடுத்த நடவடிக்கையாக இருந்தால் நல்லது”  என்றிருக்கிறார் கலைஞர். அதனால், பிரதமர் ஏதாவது அறிவிப்பை வெளியிடுமுன், தி.மு.க. சார்பில் கலைஞரே அவரைச் சந்தித்து மனு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அது தொடர்பான ஆலோசனைகளும் நடந்தன.
ஆரம்பத்தில் நடந்த ஆலோசனைகளில், கலைஞரும், கட்சியின் மற்றைய சீனியர்களும் ராஜ்பவன் சென்று பிரதமரைச் சந்திப்பது என்றும், பிரதமரின் சந்திப்பு முடிந்ததும் அப்படியே அறிவாலயம் சென்று பத்திரிகையாளர்களைச் சந்திப்பது என்றும் முடிவாகியது.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது, “முல்லைப் பெரியாறு தொடர்ப்ல் பிரதமரிடம் பேசியிருக்கிறோம். தமிழகத்தில் அவர்களது கூட்டணிக் கட்சி நாம்தானே. அந்த வகையில் எமது வேண்டுகோளுக்கு பிரதமர் செவிசாய்ப்பார் என்று நம்புகிறேன். பொறுத்திருந்து பாருங்கள். அவரிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும்”  என்று சொல்லிவிட்டால், பிரதமர் எதை அறிவித்தாலும் அதன் கிரெடிட் தி.மு.க.வுக்கு வந்து சேரும் என்று வியூகம் வகுக்கப்பட்டது.
தனக்கு நெருக்கமான சீனியர்களிடம், “நாளைக்கு சென்னையில இருய்யா. பிரதமரைச் சந்திக்க போகணும்” என்றுகூட கலைஞர் சொல்லியிருந்தார்.
இதுவரை எல்லாமே ஸ்மூத்தாகச் சென்றுகொண்டிருந்தது, சி.ஐ.டி. காலனியில் புயல் மையம் கொள்கிறது என்று தெரியாமலேயே!
கனிமொழி பெயில் கிடைத்து சென்னை வந்ததுமே அவருக்கு கட்சிப் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தவர் ராசாத்தி அம்மாள். அப்போது கோபாலபுரம் செய்த கடுமையான லாபி, கனிமொழிக்கு எந்தப் பதவியும் கிடைக்காதபடி செய்துவிட்டது. அந்த விவகாரத்தில் கடும் கோபத்தில் இருந்த ராசாத்தி அம்மாள், அதற்குப் பிறகும், கனிமொழிக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கும்படி அழுத்தம் மேல் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இப்படியான நிலையில் பிரதமரின் தமிழக விஜயம் உறுதியாகியது. அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் ராசாத்தி அம்மாள்.
“மற்றையவர்களின் பேச்சைக் கேட்டு கனிக்கு பதவிதான் கொடுக்கவில்லை. பிரதமரைச் சந்திக்க அவரை அழைத்துச் செல்லுங்கள்” என்று அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார்.
“கட்சியின் சீனியர்களை அழைத்துச் செல்வதாக முடிவாகியிருக்கிறது. அதை எப்படி மாற்றுவது?”  என்று தயங்கினாராம் கலைஞர்.
“அந்த சீனியர்களுக்கா டில்லியில் வழக்கு நடக்கிறது? எம் மகளுக்குத்தான் டில்லியில் தலைக்குமேல் கத்தி தொங்குது. கனி பிரதமரைச் சந்தித்தால், பிரதமரின் அதிகாரத்தின் கீழே இயங்கும் சி.பி.ஐ.-யின் வேகம் குறையும். இது ஒரு அருமையான சந்தர்ப்பம்” என்று ஒற்றைக் காலில் நின்றுகொண்டார் ராசாத்தி அம்மாள். கலைஞரால் இந்த அழுத்தத்தை தாண்ட முடியாது போனது.
தனக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் ஒருவர் மூலமாக இந்த விஷயத்தை ஸ்டாலினுக்கு கூறச் செய்திருக்கிறார் கலைஞர். இப்படி நடக்கலாம் என்று ஸ்டாலின் எதிர்பார்த்திருக்கலாம். பெரிதாக ரியாக்ஷன் காட்டிக் கொள்ளாமல், “என்னைக் கேட்டா எல்லாம் செய்கிறீர்கள்? நீங்க பாட்டுக்கு சென்னையில் இருந்து கட்சிக்கு கெட்ட பெயர் வருவதுபோல செய்வீர்கள். நான் உடல்நிலையையும் பார்க்காமல் ஊர்ஊராகப் போய் கட்சியை வளர்க்கணும். பேசாமல் நான் ஒதுங்கிக் கொள்கிறேன். எனக்கும் உடல்நிலை சரியில்லை” என்று மறைமுகமாக தனது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்.
இதனால், பிரதமரைச் சந்திக்க வேண்டிய காலைவரை கனிமொழியை அழைத்துச் செல்வதா இல்லையா என்பது இழுபறியில் இருந்தது. கடைசி நிமிடத்தில் சி.ஐ.டி. காலனியின் பிடிவாதம் ஜெயித்தது. கனிமொழி அழைத்துச் செல்லப்பட்டார்.
டெயில் பீஸ்:
 சென்னையில் தங்கியிருக்குமாறு கலைஞரால் கூறப்பட்ட சீனியர்கள், அழைப்பு வரும் என்று தத்தமது வீடுகளில் தயாராக இருந்தார்கள். அவர்கள் வரத் தேவையில்லை என்ற விஷயம் போனில்கூட அவர்களுக்கு சொல்லப்படவில்லை. இதனால் அவர்கள் அப்செட்.
 இவர்கள் எதிர்பார்த்ததுபோல பிரதமர் தமிழக விஜயத்தில் முக்கிய அறிவிப்பு எதையும் விடுக்கவில்லை.
 கலைஞருடன் கனிமொழியும் வருகிறார் என்ற தகவலே கடைசி நிமிடத்தில்தான் பிரதமருடன் வந்திருந்த அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சி.பி.ஐ.-யினால் குற்றவாளியாக கிரைம் ரிப்போர்ட்டில் குறிக்கப்பட்ட ஒருவரை பிரதமரைச் சந்திக்க அனுமதிப்பதா என்று முடிவெடுக்க முடியாது திணறினார்கள் அவர்கள்.
 கனிமொழி சந்திக்க வரும் விஷயம் கூறப்பட்டதும், பிரதமர் தலையில் கை வைத்தார் என்கிறார்கள்.
 ராஜ்பவனில் இருந்து அதிகாரிகள் கோபாலபுரத்தைத் தொடர்புகொண்டு ஏதாவது சொல்வதற்குமுன் கலைஞர் கனிமொழி சகிதம் ராஜ்பவன் நோக்கி கிளம்பி விட்டார்.
 இருக்கும் சிக்கல் போதாதென்று இதில் கிளைக்கதை ஒன்றும் உண்டு. தயாநிதி மாறன், பிரதமரைச் சந்திக்க தன்னையும் அழைத்துச் செல்லுமாறு குடும்பப் பெண்மணி ஒருவர் மூலம் கலைஞருக்கு தூது அனுப்பினாராம். அந்தப் பெண்மணியை கலைஞர் முறைத்துப் பார்த்ததுடன் சரி, வாய் திறந்து ஒரு வார்த்தைகூட பதில் சொல்லவில்லையாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக