சனி, டிசம்பர் 31, 2011

ஊடகவியலாளர் கைது: இஸ்ரேலிய அடாவடி


கடந்த புதன்கிழமை (28.12.2011)  வழமைபோல் பணிமுடிந்து தன்னுடைய இருப்பிடத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தார், பிரபல ஊடகவியலாளரான அமீன் அபூ வர்தா.
நப்லஸ் நகரின் பலடா அகதி முகாமில் அவரது வீடு அமைந்திருந்தது. வீட்டு வாயிலை அவரால் நெருங்க முடியாதபடி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அகதி முகாமைச் சுற்றிவளைத்திருந்தது. எங்கும் பரபரப்பு. அமீன் அபூ வர்தா ஆக்கிரமிப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு
இழுத்துச் செல்லப்பட்டார்.

இச்சம்பவம் பற்றி விபரித்த ஊடகவியலாளரின் மனைவி, தம்முடைய அகதி முகாமை பெருந்தொகையான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் சுற்றிவளைத்திருந்ததாகவும், அன்றிரவு முகாமில் இருந்த ஆண்களைத் தனியாகப் பிரித்தெடுத்து அவர்களின் அடையாள அட்டைகளைப் பரிசீலித்தபின் அபூ வர்தாவை அவர்கள் கைதுசெய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

46 வயதான அபூவர்தா பலஸ்தீனின் மிகப் பிரபலமான ஊடகவியலாளர். பிரசித்திபெற்ற வலைப்பதிவர்களுள் ஒருவர். மலேசியப் பல்கலைக்கழகமொன்றில் மின்னூடகவியலில் தன்னுடைய டாக்டர் பட்டப் படிப்பை நிறைவுசெய்யும் தறுவாயில் உள்ளவர். குத்ஸ் பிரெஸ்ஸில் சுமார் 15 வருடகாலம் செய்தியாளராகப் பணியாற்றிவரும் அபூவர்தாவின் ஊடக அலுவலகம் நப்லஸில் அமைந்திருந்தது. ஒரு செய்தியாளராகவும் வலைப்பதிவராகவும் இருந்து பலஸ்தீன் மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய அடாவடித்தனங்களையும் அத்துமீறல்களையும் வெளியுலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டிய அபூவர்தாவிள் செயற்பாடுகளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சக்திகளால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அதன் விளைவே இந்தக் கைது நடவடிக்கையாகும். அபூ வர்தாவின் கைது, ஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலாகும் என சக ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதே தினத்தில், அல் ஹலீல் பிராந்தியத்தில் இரண்டு சிறுவர்கள், நான்கு ஜெரூசலவாசிகள் உட்பட 16 பலஸ்தீனப் பொதுமக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

எந்தவித நியாயமான காரணங்களும் இன்றி, ஊடகவியலாளர், சிறுவர், முதியவர், பெண்கள் என்ற வேறுபாடின்றி பரவலாக மேற்கொள்ளப்பட்டுவரும் இஸ்ரேலிய கைதுநடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவது குறித்தும், அவ்வாறு கைதுசெய்யப்படுவோர் உரிய விசாரணையின்றி நீண்ட காலமாய் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டு இருப்பது குறித்தும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் போதிய கவனம் செலுத்தவேண்டும் என்பது பலஸ்தீன் பொதுமக்களின் கோரிக்கையாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக