வியாழன், டிசம்பர் 29, 2011

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மெளனம்... ஹஸாரே போராட்டத்துக்கு மட்டும் ரஜினி,விஜய் ஆதரவா?'

தமிழரின் ஜீவாதாரப் பிரச்சனைகள் வெடிக்கும் போதெல்லாம் உஷாராக மெளனம் காக்கும் ரஜினிகாந்த், விஜய் போன்ற நடிகர்கள், அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு ஓடி ஓடி ஆதரவளிப்பது தவறானது என்று தமிழ் உணர்வாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக இணையத்தளங்களிலும் இதுகுறித்து கடுமையான விமர்சனங்களை
ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் மீது வைத்துள்ளனர்.

சினிமா தவிர்த்து சமூக- அரசியல் ரீதியாக ரஜினியின் நடவடிக்கைகள் தொடர்ந்து மிகக் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மிக மோசமான விளைவுகளை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது. அரசியலுக்கு அப்பால் நின்று அனைவரும் தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். கேரளாவின் பொய்ப் பிரச்சாரம், விஷமத்தனம், தமிழகத்தின் உரிமையை பறிக்க அவர்கள் நடத்தும் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தும் பணியில் தாங்களாகவே முன்வந்து ஈடுபட்டு வருகின்றனர். முன்னணி இயக்குநர்கள் பலரும் இதில் அக்கறை காட்டுகின்றனர்.

ஆனால் ரஜினி, கமல், விஜய், அஜீத் என எந்த முன்னணி நடிகரும் தமிழகத்தில் இப்படியொரு விஷயமே நடப்பது போல காட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் 'கெழவிய தூக்கி மனையில் வை' என்ற வழக்குச் சொல்லை மெய்ப்பிப்பது போல, ஹஸாரேவின் உண்ணாவிரதத்துக்கு ராகவேந்திரா மண்டபத்தை இலவசமாகக் கொடுத்துள்ளார் ரஜினி இந்தப் போராட்டத்துக்கு தனது ஆதரவு உண்டு என்றும் அறிவித்துள்ளார் (ஆனால், இதில் 10 பேர் கூட கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!).

இதுதான் முல்லைப் பெரியாறுக்காகவும் கூடங்குளத்துக்காகவும் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

'கேரளத்தின் வஞ்சகத்தனத்தால் தமிழகத்தின் ஒரு பகுதியே வறண்டு பாலையாகும் அபாயம் உள்ளது. தமிழகமே ஒட்டுமொத்தமாக கொந்தளித்து எழுந்துள்ள இந்த சூழலில், அதுகுறித்து வாய் திறக்காத, தமிழர்களின் உரிமைகளுக்காக கிஞ்சித்தும் குரல் கொடுக்காத ரஜினி, நாடாளுமன்ற அமைப்பையே கேலிக்குரியதாக்கிக் கொண்டிருக்கும் ஹஸாரேவுக்கு ஆதரவளிப்பதா?', என முல்லைப் பெரியாறு அணை மீட்புக் குழுவினர் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.

டெல்லிக்குப் போய் ஹஸாரேவுக்கு ஆதரவு காட்டத் தெரிந்த விஜய்க்கு இங்கிருக்கும் தேனிக்குப் போய், முல்லைப் பெரியாறு அணை காக்க போராடும் நம் உறவுகளுக்கு குரல் கொடுக்கத் தெரியாதா" என்று கேள்வி எழுப்பியுள்ளனர் முல்லைப் பெரியாறு போராட்டக்காரர்கள்.

ஹஸாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் நபர்களுக்கு ரஜினி தன் மண்டபத்தைக் கொடுத்திருப்பதற்கு திரையுலகினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். குறிப்பாக முல்லைப் பெரியாறு விவகாரத்தில் களம் இறங்கியுள்ள பாரதிராஜா, தங்கர் பச்சான் போன்றவர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ரஜினியின் ரசிகர்களே கூட இதை பெரிதாக வரவேற்கவில்லை என்பது, இந்த உண்ணாவிரதத்துக்கு வந்த 10 பேரைப் பார்த்தபோதே புரிந்துவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக