சனி, டிசம்பர் 31, 2011

தானே புயலில் சிக்கிய தென்கொரிய கப்பல்: சென்னையில் தரை தட்டியது!


நேற்று சென்னை மற்றும் கடலூரைத் தாக்கிய தானே புயலில் தென் கொரிய கப்பலொன்று சிக்கி சென்னையில் தரை தட்டி நின்றது.
தமிழகத்தைத் தாக்கிய தானே புயல் அபாயம் காரணமாக, சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களில் உள்ள கப்பல்களை நடுக்கடலில் பத்திரமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, சென்னை துறைமுகத்தில் நின்ற 20 சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்கள் நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக நங்கூரம் பாய்ச்சி
நிறுத்தப்பட்டன. ஆனால், ஒரே ஒரு சரக்கு கப்பல் மட்டும் சென்னை துறைமுகத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் நின்றது. இதில், 14 சிப்பந்திகளும் இருந்தனர். தென்கொரியா நாட்டை சேர்ந்த இந்த கப்பல், நீதிமன்ற உத்தரவுப்படி சிறை பிடிக்கப்பட்டு நின்றதால், அதை நடுக்கடலுக்குக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

அதனால், அந்தக் கப்பல் மட்டும் பழைய இடத்திலேயே தொடர்ந்து நின்றது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தானே புயல் தாக்குதலில் சிக்கிய இந்தச் சரக்கு கப்பல், நேற்று அதிகாலை மெரினா கடற்கரைக்கு அருகே ஐ.என்.எஸ். அடையாரின் பின்புறம் தரை தட்டிநின்றது.

இதுகுறித்த தகவல், கடலோர காவல் படை அதிகாரிகளுக்கும், துறைமுக அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடம் விரைந்து சென்ற அதிகாரிகள், கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதில் உள்ள 14 சிப்பந்திகள் பத்திரமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சரக்கு கப்பல் கடந்த 22 மாதங்களாக சென்னை அருகே சிறைப்பிடிக்கப்பட்டு தத்தளித்து வருவதும், அதில் உள்ள சிப்பந்திகள் சரியான முறையில் சாப்பாடு கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதும் தொடர்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக