புதன், டிசம்பர் 28, 2011

திருகோணமலையில் குடியுரிமைச் சான்றிதழ் நடமாடும் சேவை!


இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகம் சென்றிருந்தவர்களுக்கு அங்கு பிறந்த குழந்தைகளுக்கு, இலங்கை குடியுரிமைச் சான்றிதழ்களை வழங்கும் விதமாக இரண்டு நாள் நடமாடும் சேவை திருகோணமலையில் நடக்கிறது.
இந்தியாவில் பிறந்த தமது குழந்தைகளுக்கு இலங்கை சான்றிதழ்களைப் பெறுவதில் தமிழகத்தில் இருந்து இலங்கை திரும்பிய மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து
வருகின்றனர்.
இவ்வாறு குடியுரிமை சான்றிதழைப் பெறமுடியாத நிலையில், தங்களது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதிலும் அல்லது அடையாள அட்டை போன்றவற்றைப் பெறுவதிலும் இவர்கள் பெரும் சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.
இவ்வாறு நாடு திரும்பியோரில் 21 ஆயிரம் பேர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அவதியுறுவதாகவும், இதனைக் கருத்தில் கொண்டு ஈழ ஏதிலிகள் மறுவாழ்வு அமைப்பான ஒஃபர் நிறுவனம் யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்துடன் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணத்தில் இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஒஃபர் நிறுவனத் தலைவர் சீ எஸ் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் தற்போது இந்த நடமாடும் சேவையில் குடிவரவு குடி அகல்வு திணைக்களத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நடமாடும் சேவையில் விண்ணப்பித்து பல நூற்றுக் கணக்கானோர் குடியுரிமை சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்.
குடியுரிமை சான்றிதழைப் பெற்றதனால் நீண்ட காலமாக தாங்கள் எதிர்நோக்கி வந்துள்ள கஷ்டங்கள் தீர்ந்துள்ளதாக இவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக