புதன், டிசம்பர் 28, 2011

மக்கள் ஆதரவில்லை: சிறை நிரப்பும் போராட்டம் ரத்து- ஹஸாரே அறிவிப்பு!

மும்பை: மோசமான உடல்நிலை மற்றும் மக்களிடம் போதிய வரவேற்பின்மை காரணமாக தனது உண்ணாவிரதத்தை பாதியில் முடித்துக் கொண்ட அன்னா ஹஸாரே, சிறை நிரப்பும் போராட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். 


அன்னா ஹஸாரே தனது மூன்று நாள் உண்ணாவிரதம் முடிந்ததும், சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த இருந்தார். ஆனால் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்த கூட்டத்தின் அளவு அவரையும் அவரது கோஷ்டியையும் பெரும் ஏமாற்றத்துக்கும் விரக்திக்கும் உள்ளாக்கிவிட்டது.

மும்பை மைதானத்தில் முதல்நாள் இரவில் வெறும் 40 பேர் மட்டுமே இருந்ததாக மும்பை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இரண்டாம் நாளன்று பகலில் வந்த கூட்டம் வெறும் ஆயிரம் பேர் கூட இல்லை என்பதே உண்மை. இதில் பெரும்பாலானவர்கள், "உண்ணாவிரத கூட்டத்தில் நல்ல உணவு கிடைக்கும் என்றார்கள். அதான் பார்த்துவிட்டு, முடிந்தால் சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்று வந்தோம்," என கூறியுள்ளனர்.

இதனால்தான், நேற்று முழுவதும் உடல்நிலை சரியில்லாவிட்டாலும் 3 நாட்களும் உண்ணாவிரதம் நடக்கும் என கூறி வந்த ஹஸாரேவும் அவர் கோஷ்டியினரும் இன்று பாதியில் முடித்துக் கொள்வதாக அறிவித்துவிட்டனர். 

சிறை நிரப்பும் போராட்டத்துக்கு 2 லட்சம் பேர் தயார் என்று ஹஸாரே கோஷ்டி கூறி வந்தது. ஆனால் உண்மையில் 20000 பேர் கூட இதற்கு தயாராக இல்லை என்பது தெரியவந்துள்ளது.

காரணம், சிறைக்கு வரத் தயார் என இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் தந்துள்ள தகவல்கள் பெரும்பாலும் பொய்யாக உள்ளதுதான். மேலும் ஒரு நபரே 100 படிவங்கள் நிரப்பியுள்ளார். எனவே இந்த போராட்டத்துக்கான மக்கள் ஆதரவு குறித்து ஹஸாரே கோஷ்டிக்கு சந்தேகம் எழுந்துவிட்டதால், அதை முன்கூட்டியே ரத்து செய்துவிட்டனர்.

"சிறை நிரப்பும் போராட்டம் எந்தப் பலனையும் இப்போது தராது. எனவே அதை ரத்து செய்துவிட்டோம். இப்போதைய இலக்கு, 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸைத் தோற்கடிப்பதுதான். இந்த முறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காங்கிரஸை எதிர்த்து தீவிர பிரச்சாரம் செய்வோம்," என்று அன்னா கோஷ்டியின் சர்ச்சைக்குரிய நபரான கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக