சனி, டிசம்பர் 24, 2011

பத்மஸ்ரீ விருது பெற்ற மாலிக் முகமது கொலை வழக்கில் குற்றவாளிகள் வாழ் நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் : மதுரை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !


முன்னாள் துணைவேந்தர் உள்பட 3 பேர் கொலையான வழக்கில் டிரைவர் உள்பட 2 பேருக்கு வாழ்நாள் முழுவதும் ஜெயிலுக்குள் இருக்க வேண்டும்" என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் மாலிக் முகமது. முன்னாள் துணைவேந்தரான இவர், பத்மஸ்ரீ விருது பெற்றவர். மத்திய அரசின் ஆலோசகராகவும் இருந்தார். கடந்த 12/11/2007 அன்று மாலிக் முகமது, அவருடைய மனைவி கதீஜாபீவி, வீட்டு காவலாளி ஞானப்பிரகாசம் ஆகியோர் கொலை
செய்யப்பட்டு வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர். நேசமணிநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நகைக்காக இந்தக் கொடூர கொலை நடந்தது தெரியவந்தது. விசாரணையில் மாலிக் முகமதுவிடம் ஓட்டுனராக பணியாற்றிய அன்பரசன், அவருடைய நண்பர் கோபி என்ற சகாயகுரு ஆகிய 2 பேரும் கொலையில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட அன்பரசனுக்குத் தூக்குதண்டனை விதித்தது. மேலும் 5 ஆயுள் தண்டனையும், 17 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்தது. கோபிக்கு 6 ஆயுள் தண்டனையும், 17 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை 2 பேரும் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அன்பரசன் உள்ளிட்ட 2 பேரும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அப்பீல் செய்தனர். இந்த அப்பீல் மனு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், எஸ்.நாகமுத்து ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் குற்றவியல் தலைமை அரசு வழக்கறிஞர் ஐ.சுப்பிரமணியன், மதுரை உயர் நீதிமன்ற கிளை கூடுதல் அரசு வழக்கறிஞர் சி.ரமேஷ் ஆகியோரும், அன்பரசன் தரப்பில் வழக்கறிஞர் மயில்வாகனராஜேந்திரன் ஆஜராகி வாதாடினார். கோபி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபிநாத், வழக்கறிஞர் பி.ஆண்டிராஜ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:
"இறந்து போன மாலிக்முகமது சமுதாயத்தில் மதிப்புக்குரியவராக இருந்தவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். அவருடைய மனைவி கதீஜாபீவி கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலை அரிதிலும் அரிதானது என்ற அடிப்படையில்தான் குற்றவாளியான அன்பரசனுக்கு கீழ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கை பொறுத்தமட்டில் அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்று கூறவில்லை.
அதே வேளையில் சூழ்நிலை சாட்சியங்கள் அடிப்படையில்தான் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. சூழ்நிலை சாட்சியங்கள் அடிப்படையில் தூக்கு தண்டனை அளிக்க முடியாது. எனவே அன்பரசனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு, அது ஆயுள்தண்டனையாக மாற்றப்படுகிறது.

அதே வேளையில் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 120(பி)(கூட்டு சதி) கீழ் அளிக்கப்பட்ட ஆயுள்தண்டனையும் ரத்து செய்யப்படுகிறது. மற்றபடி கீழ் நீதிமன்றம் விதித்த 5 ஆயுள்தண்டனையையும், 17 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையையும் அன்பரசன் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் 120(பி)&ன் கீழ் கோபிக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையும் ரத்து செய்யப்படுகிறது. இதன்மூலம் அவருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 6 ஆயுள்தண்டனை 5 ஆயுள்தண்டனையாக குறைக்கப்படுகிறது. இந்தத் தண்டனையுடன், கீழ் நீதிமன்றம் ஏற்கனவே விதித்துள்ள 17 ஆண்டுகள் சிறை தண்டனையையும் கோபி தனித்தனியாக அனுபவிக்க வேண்டும். குற்றவாளிகள் 2 பேரும் அவர்களது வாழ்நாள் முழுவதும் சிறைக்குள் இருக்க வேண்டும்."
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக