வெள்ளி, டிசம்பர் 23, 2011

ஜெருசலேம் செல்ல அரசு மானியம்: முதல்வர் அறிவிப்பு

இசுலாமியர்களின் புனித தளங்களுள் ஒன்றான ஜெருசலம் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் புனித தளமாக உள்ளது. தமிழகத்திலிருந்து ஜெருசலம் நகருக்கு பயணம் மேற்கொள்ள அனைத்துப் பிரிவு கிறிஸ்தவர்களுக்கும் அரசு மானியம் வழங்கப்படும் என்றும் முதற்கட்டமாக 500 பேருக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான செல்வி ஜெயலலிதா சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு பேசியதாவது:

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு,பகைவனுக்கும் அருளுங்கள்  போன்ற இயேசுபிரானின் அருள் வசனங்கள் அழியாப் புகழ் பெற்றவை.இயேசுவின் காந்த விழிகளும்,அன்பு ததும்பும் மொழிகளும் உலகப் புகழ் பெற்றவை. தன்னை சிலுவையில் அறைந்தவர்களைக்கூட மன்னிக்கும்படி மன்றாடியவர் அவர்.இயேசுவின் போதனைகளான தியாகம், மன்னிப்பு, அன்பு, சகோதரத்துவம், சமாதானம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழகத்தில் அமைதி நிலவவும்,தொழில்,விவசாய உற்பத்தியில் புரட்சி ஏற்படுத்தவும், மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடையவும், அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்கவும் எனது அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

கடந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டபோது ஜெருசலேம் நகருக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ள அனைத்துப் பிரிவு கிறிஸ்தவர்களுக்கும் அரசு நிதியுதவி அளிக்கப்படும் என்று வாக்களித்திருந்தேன்.முதல் கட்டமாக 500 கிறிஸ்தவர்கள் அங்கு சென்றுவர ஏற்பாடுகள் செய்யப்படும். உங்களின் இதர கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்.

ஒவ்வொரு மனிதனும் என் நண்பன், சகோதரன் என்ற பாச உணர்வோடு பயணிப்போம். இயேசு தன் பிறப்பிலும், வாழ்விலும் நமக்குக் கூறும் நற்செய்தியின்படி வாழ்ந்து உலகை மகிழ்ச்சி பூங்காவாக மாற்றுவோம். யார் எனக்கு எதைச் செய்தாலும், நான் எல்லோருக்கும் நன்மையே செய்வேன் என்ற அர்ப்பணிப்பு உள்ளத்தோடு வாழ்வோம் என்பதுதான் எனது கிறிஸ்துமஸ் செய்தி என்றார் முதல்வர் ஜெயலலிதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக