வெள்ளி, டிசம்பர் 23, 2011

நாடாளுமன்றத்தை மதிக்க முடியாதா?: ஹசாராவை விளாசிய மும்பை உயர் நீதிமன்றம்!

 மும்பை: லோக்பால் மசோதா குறித்து வீட்டில் இருந்தே பிரச்சாரம் செய்யலாமே, மைதானம் எதற்கு என்று மும்பை உயர் நீதிமன்றம் அன்னா ஹசாரேவை கேட்டுள்ளது.
வலுவான லோக்பால் மசோதா வேண்டி அன்னா ஹசாரே வரும் 27ம் தேதி முதல் 3 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்கவிருக்கிறார். அதற்காக மும்பை எம்எம்ஆர்டிஏ மைதானத்தை தேர்வு

செய்தனர். ஆனால் அந்த மைதானத்தின் ஒரு நாள் வாடகை ரூ.3.77 லட்சம் என்பதால் அன்னா குழு சற்று தயங்கியது. இதையடு்தது மைதானத்தை இலவசமாக அல்லது குறைந்த விலையில் தங்களுக்கு தருமாறு அன்னா குழு மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதற்கிடையே ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கலாமே என்று மகாராஷ்டிரா அரசு அன்னாவுக்கு அறிவுரை வழங்கியது. ஆனால் அந்த மைதானம் சிறியதாக உள்ளது என்று அன்னா குழு தெரிவித்தது. ஆசாத் மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் இடத்தையும் சேர்த்துக் கொடுத்தால் அங்கு போராட்டம் நடத்தத் தயார் என்று அந்தக் குழு கூறியது.
 இந்நிலையில் அன்னா குழுவின் மனு நீதிபதிகள் மஜ்முதார், மிருதுலா பட்கர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது,

இது ஒரு ஜனநாயக நாடு. நாம் ஒரு அரசைத் தேர்வு செய்துள்ளோம். நாடாளுமன்றத்தில் லோக்பால் குறித்து விவாதம் நடைபெற்றுவரும் நிலையில் அதற்கு இணையானதொரு பிரசாரத்தை நீதிமன்றம் அனுமதிக்க முடியாது. உங்கள் போராட்டம் நாடாளுமன்ற செயல்பாட்டில் குறுக்கிடுவதாக இல்லையா?. லோக்பால் மசோதா குறித்து மக்கள் தேர்வு செய்த பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் விவாதிப்பார்கள். சட்டம்-ஒழுங்கை காக்க நாங்கள் உறுதிமொழி எடு்ததுள்ளோம். எந்த சட்டத்தின் கீழ் நீங்கள் வாடகையைக் குறைக்கச் சொல்கிறீர்கள்?.

உங்களுக்கு வேண்டுமானால் அது சத்யாகிரகமாக இருக்கலாம். ஆனால் பிறருக்கு அது தொல்லை தானே?. சத்தியாக்கிரகத்தை விரும்பாத மக்களும் நாட்டில் இருக்கிறார்கள். பொதுக்கூட்டங்களால் மும்பையில் ஏற்கனவே கடும் ஒலி மாசு ஏற்படுகிறது. இதனால் மும்பை மக்கள் மிகுந்த எரிச்சலில் உள்ளனர்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கிடைத்தால் அங்கே போக வேண்டியது தானே? பிறகு ஏன் இங்கே தான் உண்ணாவிரதம் இருப்போம் என்கிறீர்கள். இடத்தில் என்ன இருக்கிறது?.

உங்களுக்காக எல்லாம் வாடகையைக் குறைக்கக்கோரி மகாராஷ்டிரா அரசு அதிகாரிகளைக் கேட்க முடியாது. அதற்குப் பதில் வீட்டில் இருந்தே பிரச்சாரம் செய்யலாமே, மைதானம் எதற்கு என்றனர்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி:

இந் நிலையில் டிசம்பர் 27ம் தேதி முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த டெல்லி போலீசார் ஹசாரே குழுவுக்கு அனுமதி அளித்துள்ளனர்.

ஆனால், தற்போது அன்னா குழுவினர் உண்ணாவிரதப் போராட்டத்தை எங்கு நடத்துவது என்று தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக