சனி, டிசம்பர் 28, 2013

பி.ஜே.பி-யின் மாநிலத் துணைத் தலைவர் ஹெச்.ராஜா பல்வேறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்?

பி.ஜே.பி-யின் மாநிலத் துணைத் தலைவர் ஹெச்.ராஜா பல்வேறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்’ என்று தமிழக பி.ஜே.பி. தலைவர்களுக்கு ஓர் அதிரடிக் கடிதம் வந்துள்ளது.நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சூடு கிளப்பியிருக்கிறது இந்த சீட்டிங் விவகாரம்!பழனியப்பன் என்பவரும் அவருடைய மனைவி ரேவதியும்  காரைக்குடியில் உள்ள ராஜா வீட்டின் முன்பு தங்கள் பணம் வேண்டி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவர்களைச் சந்தித்தோம்.பழனியப்பன் நம்மிடம் பேசினார். ''நான் 85-ம் ஆண்டு முதல் பி.ஜே.பி-யில் இருந்து வருகிறேன். எனது சொந்த ஊர் காரைக்குடி அருகே உள்ள கண்டனூர். ராஜா எனக்கு நெருக்கமான நண்பர். ராஜா என்னிடம் காரைக்குடியில் லோட்டஸ் பெனிஃபிட் ஃபண்ட் என்று சிட் ஃபண்ட் ஆரம்பித்திருப்பதாகக் கூறினார். அதில் 97-ம் ஆண்டு நவம்பர் மாதம் 50,000 ரூபாய் முதலீடு செய்தேன். அதற்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வட்டி அளித்தனர்'' என்றதும் அருகில் இருந்த அவருடைய மனைவி ரேவதி பேசத் தொடங்கினார்.

''நான் பி.ஜே.பி-யின் தேசியக் குழு உறுப்பினராக இருந்தேன். 99-ம் வருடம் மேலும் இரண்டு லட்சம் பணம் போட்டோம். மொத்த பணத்துக்கும் வட்டி முதலில் சரியாக வந்து கொண்டிருந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து ராஜா மற்றும் அவருடைய மைத்துனர் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் வந்து மீண்டும் பணம் கேட்டார்கள். ராமச்சந்திரன் வங்கி மேலாளராகப் பணியாற்றி வந்தார். நம்பிக்கை வருவதற்காக அவருடைய செக்கைக் கொடுத்துப் பணம் கேட்டார். ஐசிஐசிஐ வங்கியின் இரண்டு செக் மூலம் ஏழு லட்சமும் டி.டி-யாக ஒரு லட்சமும் கொடுத்தோம். மொத்தமாக பத்தரை லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்து இருந்தோம்.
அதன்பின் சில மாதங்களில் ராஜா, 'சிட் ஃபண்டில் திருடு போய்விட்டது. உங்களது பணத்தை எனது மைத்துனர் தந்துவிடுவார்’ என்றார். எங்களுக்கு வட்டியும் வரவில்லை... அசலும் வரவில்லை. சில நாட்களில் ராமச்சந்திரனும் பேங்க் வேலையை ராஜினாமா செய்துவிட்டு லண்டன் சென்றுவிட்டார். ராமச்சந்திரன் கொடுத்த செக்கை நாங்கள் 2004-ம் வருடம் அக்டோபர் மாதம் பேங்கில் போட்டோம். அந்த செக் பவுன்ஸ் ஆகிவிட்டது. இதுவரை வட்டியும் முதலுமாக 40 லட்ச ரூபாய் வர வேண்டும்'' என்றார் கண்ணீருடன்.
இதுபற்றி ஹெச்.ராஜாவிடம் நாம் கேட்டோம். ''நான் லோட்டஸ் பெனிஃபிட் ஃபண்ட்ல ஒரு இயக்குநரா இருந்தேன். சில வருடங்கள் கழித்து நான் அதில் இருந்து விலகிவிட்டேன். அதை மூடும்போது யாருக்கெல்லாம் பணம் கொடுக்கணுமோ கொடுத்து முடிச்சாச்சு. பழனியப்பன் இரண்டரை லட்சம்தான் பெனிஃபிட் ஃபண்ட்ல போட்டார். மீதி எட்டு லட்சம் ராமச்சந்திரனுக்குக் கடனா கொடுத்தது. ராமச்சந்திரனின் மனைவி அதை கொஞ்சம் கொஞ்சமா கொடுத்து, வாங்கியதைவிட கூடுதலான தொகையைக் கொடுத்துவிட்டார். அதற்கு உண்டான அனைத்து ரசீதும் இருக்கு. அவங்க கேட்கிற கந்துவட்டி எல்லாம் எப்படி தரமுடியும்? என்னுடைய இமேஜை உடைக்கத்தான் சிலர் இப்படி மொட்டைக் கடுதாசி போடுறாங்க. அவங்க யாருனு எனக்குத் தெரியும். தேர்தலில் எனக்கு சீட் கிடைக்கக் கூடாதுனு சிலர் நினைக்கிறாங்க'' என்றார் காட்டமாக.
ஹெச்.ராஜா என்ன சமாதானம் சொன்னாலும் அவரைப் பற்றி மொட்டைக் கடிதங்கள் பரவுவது குறைந்தபாடில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக