சனி, டிசம்பர் 07, 2013

எதிர்கட்சிகளுக்கு அடிபணியும் மதிய அரசு

பாஜக, திரிணமூல் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, வகுப்புக் கலவரத் தடுப்பு மசோதாவில் பல திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் வகுப்புக் கலவரத் தடுப்பு மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. கலவரத் தாக்குதல்களில் இருந்து சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த மசோதா உருவாக்கப்பட்டது
. இது குறித்து மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் கே.ரஹ்மான் கான் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், “இந்த மசோதா மக்களைப் பிளவுபடுத்தும் மசோதா அல்ல. இந்த விவகாரத்தில் கருத்தொற்றுமை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மசோதாவைக் கொண்டுவர கலந்தாலோசனைகள் நடத்தப்படுகின்றன. மத்திய உள்துறை இதுப்பற்றி மற்ற மாநிலங்களுடன் விவாதித்து அவற்றின் கருத்தைக் கோரி வருகிறது.” என்றார். இந்த மசோதாவுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்துக் கேட்டதற்கு, "இது போன்ற சட்டத்தை அவர் விரும்பாமல் இருக்கலாம். குஜராத்தில் மோசமான மதக் கலவரம் நிகழ்ந்தது. அதைக் கட்டுப்படுத்த அவர் தவறிவிட்டார். மதக் கலவரத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவருவது மத்திய அரசின் கடமை.” என்று ரஹ்மான் கான் பதில் அளித்தார். இந்த நிலையில், வகுப்புக் கலவரத் தடுப்பு மசோதாவுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தத்கது. பாஜக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் விமர்சனத்தைத் தொடர்ந்து மதக்கலவரத் தடுப்பு மசோதாவில் உள்ள ஷரத்துகளைத் திருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், வகுப்புக் கலவரத் தடுப்பு மசோதாவைக் கொண்டுவருவதற்கு ஐக்கிய ஜனதா தளம், ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. எதிர்கட்சிகளின் சுயநலன் அடிப்படையிலான எதிர்ப்பால் வகுப்புக் கலவர மசோதா நீர்த்துப் போகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக