செவ்வாய், டிசம்பர் 17, 2013

காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணியா ? கருணாநிதி :

சென்னை: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். நம்பிக்கை துரோகம் செய்த காங்கிரசுடன் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த வகையிலும் திமுக கூட்டணி சேராது என்று கட்சியின் பொதுக்குழுவில் பேசிய கருணாநிதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுக்குழுக் கூட்டம், கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.இந்தக் கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும், ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது’ என்று ஆவேசத்துடன் வலியுறுத்தினர்.2G அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நம்ப வைத்து ஏமாற்றிய காங்கிரஸ் கட்சியுடன் சேர வேண்டாம் என்றும், அதே நேரத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் சிறுபான்மையினர் ஓட்டுகளை இழக்க நேரிடும் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர். தனித்து நிற்க வேண்டும் என்ற கருத்தை சிலர் கூறினர்.நிர்வாகிகள் பலர் காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம் என வலியுறுத்தினாலும், கடைசியாக கூட்டணி குறித்து தலைவரே முடிவு செய்ய வேண்டும் என்றனர். மொத்தத்தில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க கட்சிக்குள் கடும் எதிர்ப்பு காணப்பட்டது.

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பேசும்போது, ”கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேசும்போது, ஜெயலலிதா போல சர்வாதிகாரப் போக்குடன் நாமும் உறுதியாக நடந்து கொள்ள வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீ்ட்டில் தாமதம் செய்யக்கூடாது’’ என்று கூறியதாக திமுக நிர்வாகி ஒருவர் கூறினார்.பொதுக்குழுவில் நிறைவாக கருணாநிதி பேசியது பற்றி திமுக முக்கியப் பிரமுகர் ஒருவர் கூறியதாவது:2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, என் மகள் கனிமொழி ஆகியோர் மீது குற்றம் சுமத்தினார்கள். கனிமொழியை 8 மாதம் சிறையில் அடைத்தார்கள். எல்லோரும் தப்பித்து ஓட முயற்சித்த போது, இவர்கள் இருவரை மட்டும் சிபிஐ மூலம் சிக்க வைத்தனர். சிபிஐ யார் வசம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாதா?இவர்களை சிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், இயக்கத்தையே சிக்க வைக்க முயற்சி செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.தயாளு அம்மாளுக்கு ஏற்பட்ட சங்கடம், கனிமொழி, ராசாவுக்கு ஏற்பட்ட களங்கம், இவையெல்லாம் காங்கிரஸ் ஏற்படுத்திய மாயை ஆகும். இப்படி நமக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களுடன் மீண்டும் போய் விடுவோம் என்று நீங்கள் தயவுசெய்து எண்ண வேண்டாம்.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மனிதருள் மாணிக்கம் ஆவார். அவரும், அத்வானியும் நம்மை மதித்து, நமது கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து நிறைவேற்றித் தந்தனர். அப்போது இருந்த பா.ஜ.க. வேறு; இப்போது இருக்கும் பா.ஜ.க. வேறு. யாருடனும் கூட்டணி சேராமல் தனித்து நிற்போம் என்று நீங்களும், பொதுச் செயலாளர் அன்பழகனும், பொருளாளர் மு.க. ஸ்டாலினும் வலியுறுத்திப் பேசினீர்கள்.நாம் யாருடனும் அணி சேராவிட்டால், தனித்து நிற்போம். 75 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட நம் இயக்கத்தில், தம்பிகளாகிய உங்களை நம்பி தனித்துப் போட்டியிடுவோம். உங்களை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுத் தர மாட்டோம். அப்படி தனித்து நிற்கும் நிலை வந்தால், நீங்கள்தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவீர்கள். 

அப்போது நீங்கள் தனித்தனி அணி அமைத்துவிடக் கூடாது. தேர்தல் வரும், போகும். வெற்றி, தோல்வியும் அப்படித்தான். ஆனால், கட்சி மட்டுமே நிலைத்து நிற்கும்.தனிப்பட்ட விரோதம் காரணமாக கட்சியை யாருக்கும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று உங்களை தாள்பணிந்து கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்துக்கும், தமிழருக்குமான இந்த இயக்கம், ஆயிரம் காலத்துப் பயிர். பெரியார், அண்ணா, நான், பேராசிரியர், நீங்கள் எல்லோரும் சேர்ந்து வளர்த்த இந்த இயக்கத்தை ஒற்றுமையுடன் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி பேசியதாக அந்தப் பிரமுகர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக