சனி, டிசம்பர் 14, 2013

இந்திய தூதரக அதிகாரி கைது: அமெரிக்க தூதருக்கு இந்தியா சம்மன்

நியூயார்க்கில் இந்தியத் துணைத் தூதர் கைது செய்யப்பட்டதற்கு அதிர்ச்சி வெளியிட்டுள்ள வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், அது தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவலுக்கு சம்மன் அனுப்பினார்.விசா மோசடி தொடர்பான குற்றச்சாட்டில், இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ராகடே பொது இடத்தில் கைவிலங்கிட்டு கைது செய்யப்பட்டதற்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ள வெளியுறவுச் செயலர், அத்தகையை நடவடிக்கை ஏற்புடையது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க அதிகாரிகளின் நடவடிக்கை, இந்திய தூதரக அதிகாரிகளை அவமதிக்கும் விதத்தில் இருப்பதாகவும், அது தொடர்பாக சட்ட ரீதியாக அணுக முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுச் செயலரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.முன்னதாக, அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதர் தேவயானி (வயது 30), தனது மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டுத் திரும்பியபோது நேற்று கைது செய்யப்பட்டார்.தனது வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக நியமித்தப் பணிப்பெண்ணுக்கு அமெரிக்க விசா பெறுவதற்கு போலியான ஆவணங்களை சமர்ப்பித்ததாக, அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 

இதன் அடிப்படையில் 15 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.இதைத் தொடர்ந்து, தேவயானி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஏற்று, 250,000 டாலர் பிணைத் தொகையில், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.அமெரிக்காவில் இந்தியத் துணைத் தூதர் கைது செய்யப்பட்ட சம்பவம், இந்தியத் தூதரக அதிகாரிகள் மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் துணைத் தூதர் ஒருவர் கைது செய்யப்பட்டது, இந்தியத் தூதரக அளவில் மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக