செவ்வாய், டிசம்பர் 17, 2013

திராவிட மண்ணில் மதவாத பா.ஜ.க.வை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

தி்ண்டுக்கல்: “திராவிட மண்ணில் மதவாத பா.ஜ.க.வை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்” என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கடந்த டிசம்பர்  14, 15 ஆகிய தேதிகளில் தி்ண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த செயற்குழுவிற்கு மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். தேசிய பொதுச் செயலாளர் ஓ.எம்.ஏ. சலாம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் ஏ. காலித் முஹம்மது விடுத்துள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது:
பாராளுமன்ற தேர்தல் வரக்கூடிய பரபரப்பான சூழ்நிலையில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், மதவாத கட்சியான பா.ஜ.க.வுக்கும் பலத்த அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் மக்கள் தீர்ப்பளித்துள்ளார்கள்.குறிப்பாக, டெல்லியில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத அளவில் பெரும்பான்மையற்ற சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம் மதவாத கட்சியான  பிஜேபியின்  மோடி மாயை வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இந்நிலையில் திராவிட பூமியாம் தமிழகத்தில் மதவாத கட்சிக்கு இடமளிக்காத வகையில் அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் தங்கள் நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.ஓரினச்சேர்க்கை எனப்படும் இயற்கைக்கு மாற்றமான உறவை தண்டனைக்குரிய குற்றமாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்ததை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது. ஓரினச்சேர்க்கை தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் ஆபத்தானது. குடும்ப உறவுகளுக்கும் ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் நமது சமூகத்தில் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மேற்கத்திய நாடுகளை கண்மூடித்தனமாக பின்பற்றுவது நவீனம் அல்ல, அது அடிமைத்தனம் என்பதை நாம் உணர வேண்டும்.தமிழர்களின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் அதிக பொருட்செலவில் அணுக் கழிவுகளை உருவாக்கி ஆபத்துகளை உண்டாக்கக்கூடிய அணு உலையை மத்திய அரசு இழுத்து மூட வேண்டும். அணுத் தீமையற்ற தமிழக நாளான டிசம்பர் 21 அன்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொள்ள உள்ளது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் கருத்தரங்கம் நடைபெறும். இதில் திரளான   மக்கள் கலந்து கொள்ள வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது.வங்காள தேசத்தில் முக்கிய அரசியல் கட்சியான ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்த தலைவர் அப்துல் காதர் முல்லாவை தூக்கிலிட்ட ஷேக் ஹஸீனா அரசின் நடவடிக்கையை பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.ஷேக் ஹஸீனா அரசு தனது பதவி நாற்காலியை காப்பாற்ற நீதிமன்றத்தை பயன்படுத்தி நடத்திய அரசியல் படுகொலையே அப்துல் காதர் முல்லாவை தூக்கிலிட்ட சம்பவம். வங்காள தேசத்தில் மக்களிடையே மோதலை உருவாக்கி இரத்தத்தை ஓடச் செய்வதற்கு அரசு முயற்சிக்கிறது.வங்காள தேச அரசின் மனித குலத்திற்கு எதிரான செயலுக்கு எதிராக இந்தியா கண்ணை மூடக் கூடாது. இப்படுகொலையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல இந்தியா முயற்சி எடுக்கவேண்டும்.திண்டுக்கல் நரிப்பாறையை சேர்ந்த மீரான் மைதீன் (47) என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 8 ஆண்டுகள் மதுரை சிறையில் இருந்து வருகிறார். அவரின் அப்பீல் மனு உச்சநீதிமன்ற நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவரின் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து மருத்துவமனையில்  உயிருக்கு போராடி வருகிறார். தன்னுடைய ஆயுளின் கடைசி பகுதியில் அவர் குடும்பத்துடன் இருக்க அவரை கருணையின் அடிப்படையில்  விடுதலை செய்யவேண்டும்.டிசம்பர் 29, 30 / 2013 ஆகிய தேதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுக் குழு நெல்லையில் நடைபெற உள்ளது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடந்த ஒரு வருட பணிகள் பற்றிய மீளாய்வு மற்றும் எதிர்கால பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.இவ்வாறு பொதுச் செயலாளர் ஏ. காலித் முஹம்மது தனது பத்திரிகைச் செய்தியில் கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக