புதன், டிசம்பர் 25, 2013

அங்கோலா அரசாங்கம் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல: பள்ளிவாசல் இமாம் உஸ்மான் பின் ஸைத்

அங்கோலாவில் இஸ்லாம் சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளதோடு, பள்ளிவாயல்களை தகர்க்குமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என வெளியான செய்தியில் எந்தவித உண்மையுமில்லை என அந்த செய்தியை அந்நாட்டு பள்ளிவாயல் இமாம் ஒருவர் முழுமையாக மறுத்துள்ளார். வழிப்பாட்டுத் தலங்கள் அமைக்கவென நியமிக்கப்பட்ட பகுதிகளில் அல்லாமல் அதற்கு வெளியில் அமைக்கப்பட்டமையே குறித்த சில மஸ்ஜித்கள் உடைக்கப்பட்டமைக்கான காரணம் எனவும் அவர் தெளிவு படுத்தியுள்ளார்.
தலைநகர் லுவாண்டோவில் அமைந்துள்ள நூருல் இஸ்லாம் பள்ளிவாயலின் இமாம் உஸ்மான் பின் ஸைத் அவர்களே மேற்கண்டவாறு குறிப்பிட்டுளார்.இதுபற்றி அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பள்ளிவாசல்கள் அனைத்தையும் மூடிவிட "அங்கோலா" அரசு முடிவு செய்துள்ளது என  வெளிவந்த தகவலிலும் எந்த உண்மையுமில்லை. எமது நாட்டின் கலாச்சார மற்றும் மத அலுவல்கள் அமைச்சிடம் நாம் இதுபற்றி வினவிய போது அவர்களும் அப்படி ஒன்றும் நிகழவில்லை என மறுத்துவிட்டார்கள் எனவும் குறிப்பிட்டார். 
அதே நேரத்தில் பள்ளிவாயல்களை மூடிவிமாறு எடுக்கப்பட்ட தீர்மானமானது ஹுவாம்போ நகரில் அமைந்துள்ள குறித்த ஒரு மஸ்ஜிதுக்கானதாகும். வழிப்பாட்டுத் தலங்கள் அமைக்கும் பிரதேசங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தவே இந்த தீர்மானம் அங்கோலா அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டது, இது மிகவும் சொற்ப நாட்களுக்கானதாகும். மேலும் இத்தீர்மானம் பள்ளிவாயல்களை மாத்திரம் மையப்படுத்தியது அல்ல. கிறிஸ்த்தவ தேவாலயங்கள் உட்பட அனைத்து வழிப்பாட்டுத் தளங்களையும் உள்ளடக்கியதாகும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
அங்கோலிய அரசாங்கம் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல, மாற்றமாக இஸ்லாம் பற்றிய நல்லெண்ணம் அரசாங்கத்திடம் இருக்கிறது என நான் நம்புகிறேன்.   இந்த வருட இறுதிக்குள் இஸ்லாத்தை சட்டரீதியாக அவர்கள் அங்கீகரிப்பார்கள் எனவும் நாம் எதிர்பார்க்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.அதே நேரத்தில் அரசாங்கம் பள்ளிவாயல்கள் அமைக்க தடையின்றி அனுமதி வழங்குகிறது. சுமார் 90 ஆயிரம் முஸ்லிம்கள் மாத்திரம் உள்ள அங்கோலாவில் நாடு பூராவும் 130 பள்ளிவாயல்கள் உள்ளன எனவும் அவர் அதன் போது தெளிவுபடுத்தினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக