ஞாயிறு, டிசம்பர் 01, 2013

லண்டன்: மலேசிய பெண் அடிமை விடுவிப்பு. இந்திய தம்பதியினர் கைது..

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் லாம்பெத் என்ற இடத்தில் இருந்து ஒரு தன்னார்வ தொண்டு அமைப்புக்கு சில தினங்களுக்கு முன்னர்பெண் ஒருவர் டெலிபோனில் அழுது கொண்டே பேசினார்.

தானும் மற்றும் 2 பெண்களும் ஒரு வீட்டில் 30 ஆண்டுகளாக அடிமையாக அடைத்து வைக்கப்பட்டு கொடுமைகளையும், சித்ரவதைகளையும் அனுபவித்து வருவதாக அந்த பெண் கூறினார்.

அதைத்தொடர்ந்து, அந்த அமைப்பினர் போலீஸ் உதவியுடன் அந்த வீட்டுக்கு சென்றனர். பின்னர் அங்கு அடிமைகளாக நடத்தப்பட்ட 3 பெண்களையும் மீட்டனர்.

மீட்கப்பட்டவர்களில், 69 வயது மலேசிய பெண், 57 வயது அயர்லாந்து பெண் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு 39 வயது பெண்ணும் அடங்குவர். வீட்டு வேலைக்கு அழைத்து வரப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக அடிமைகளாக நடத்தப்படுவதாக அவர்கள் கூறினர்.

இவர்களை அடைத்து வைத்திருந்ததாக இந்திய வம்சாவழியை சேர்ந்த தம்பதியர் மற்றும் 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் அனைவரும் மார்க்சீய கொள்கைகளில் அதீத ஈடுபாடு கொண்டவர்கள் என்பதும்,மாவோயிஸ்ட் அமைப்பினருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.இந்திய வம்சாவழியை சேர்ந்த தம்பதியரின் பெயர் அரவிந்தன் பாலகிருஷ்ணன் (73),சந்தா (67) என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

1960-ம் ஆண்டுவாக்கில் இங்கிலாந்தில் குடியேறிய இவர்கள் இதற்கு முன்னதாக 1970-ம் ஆண்டு ஒருமுறை கைதாகி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மீட்கப்பட்ட பெண்களில் ஒருவரான சிடி ஆயிஷா அப்துல் வகாப் (69) என்பவரை மலேசியாவில் வசிக்கும் அவரது சகோதரி கமர் மக்தூம் (73) நேற்று லண்டனில் சந்தித்தார்.

1968-ம் ஆண்டு விமானியாக பயிற்சி பெற லண்டன் வந்த ஆயிஷா, பின்னாளில் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு மலேசியாவில் உள்ள குடும்பத்தை வெறுத்து ஒதுக்கி விட்டார்.

சுமார் 40 ஆண்டுகளாக பிரிந்து இருந்த சகோதரிகள் ஆரத்தழுவி அன்புமழை பொழிந்த காட்சி மனதை உருக்குவதாக அமைந்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக